இமயத்துக்கே மகுடமா?
வாசகர்களுக்கு வணக்கம்.
இரண்டாண்டுகள் நிறைவையொட்டித் தொடர்ந்து வாழ்த்துக்களை அனுப்பிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துச் செய்திகளின் இரண்டாம் பகுதி இங்கே. இதழ் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் பெரும்பாலும் பொன்னியின் செல்வன் யாஹூ குழும உறுப்பினர்கள் மட்டுமே படித்து வந்த நிலை மாறி, இன்று பல தளங்களில் இருக்கும் தமிழர்களையும் வரலாறு.காம் ஈர்த்திருப்பது குறித்தும் வரலாறு.காம் மூலம் பொ.செ குழுவைப் பற்றி அறிந்து கொள்வது குறித்தும் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் சில கருத்தரங்குகளுக்குச் சென்றிருந்தபோது, பல அறிஞர்களையும் அவர்களது சிறந்த ஆராய்ச்சிகளையும் கண்டு வெகுவாக வியந்து இருக்கிறோம். இவர்களைப் போல் நம்மாலும் குறிப்பிடத்தக்க (Significant) ஒரு அரிய கண்டுபிடிப்பை ஆய்வு செய்து அறிஞர் வரிசையில் இடம் பிடிக்க முடியுமா என்று ஏங்கியதுண்டு. ஆனால் இன்று, அத்தகைய அறிஞர்களிடமிருந்தே பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெறும்போது உள்ளம் கள்வெறி கொண்டு, உடனே நெகிழ்ந்தும் போகிறது.
சென்ற மாதம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'தமிழக வரலாற்றில் அண்மைக் கண்டுபிடிப்புகள்' என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, பேராசிரியர் முனைவர். இராஜகோபால் அவர்கள் முனைவர் நளினியிடம் 'வரலாறு.காம்' இதழை யார் நடத்துகிறார்கள் என்று கேட்டுப் பாராட்டியதைக் கேட்டதும், வரலாறு.காம் அவருக்கு எந்த அளவுக்கு நிறைவு தந்திருக்கிறது என்று புரிந்து கொண்டோம். ஆய்வுகள் பல செய்த அப்பெருந்தகைக்கு இம்மின்னிதழைப் படித்துத்தான் தகவல்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லாதபோதும், 'எதேச்சையாகப் பார்த்தேன்! இரண்டாண்டுகளாக வருவது தெரியாமல் போயிற்றே! ரொம்ப எளிமையா செய்யறீங்க!' என்று சொன்னது மிகப்பெரும் ஊக்க மருந்தாக அமைந்தது. ஆய்வுலக மாளிகையின் முதல் படிக்கட்டில் ஏறிவிட்டோம் என்று மனம் ஆனந்தக் கூச்சலிடும் அதே வேளையில், எங்கள் முன் காத்திருக்கும் கடமைகளையும் அறிஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்கும், ஆய்வுப்பாதையில் காத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ளவும் இராஜராஜீசுவரப் பெருவுடையாரை வேண்டுகிறோம்.
ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து, அதில் முன்னேறும்போது வாழ்த்துச் சொல்பவர்களுக்கு மட்டும் நன்றி கூறினால் போதாது. அவ்வழியை அமைத்துத் தந்தவர்களையும், அதில் ஏற்கனவே பயணித்து, கற்களையும் முட்களையும் அகற்றித் தந்தவர்களுக்கும் நன்றி கூறுவதுதானே தமிழ்ப் பண்பாடு! அந்த வகையில், 'தொல்லியல் இமயம்', 'பிராமி கல்வெட்டுகளின் தந்தை' என்றெல்லாம் சக ஆய்வாளர்களால் போற்றப்படும் திரு ஐராவதம் மகாதேவன் IAS அவர்கள் மத்திய அரசுப்பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, தம் வாழ்நாளையே தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வுகளுக்காக அர்ப்பணித்ததற்கு நன்றி செலுத்துவது நம் அனைவரின் கடமை. அவரது அடையாள அட்டை என்று சொல்லக்கூடிய அளவுக்குத் தரம் வாய்ந்த 'Early Tamil Epigraphy' என்ற அவரது புத்தகத்துக்காக அவர் உழைத்தது ஒன்றல்ல; இரண்டல்ல; சுமார் 42 வருடங்கள். இதிலிருந்தே அவரது அர்ப்பணிப்பு எத்தகையது என்று வாசகர்கள் உணர்ந்து கொள்ளலாம். சில மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொல்லியல் கண்டுபிடிப்பை 'Discovery of the Century!!' என்று பாராட்டியது பிற ஆய்வாளர்களை எந்த அளவுக்கு மதிக்கிறார் எனப் புரிந்து கொள்ள உதவும்.
இதுபோல் இன்னும் எண்ணற்ற சிறப்புக்களைப் பெற்ற இத்தகைய ஓர் அறிஞரது வாழ்நாள் சாதனைக்காக மரியாதை செய்ய வரலாறு.காம் முடிவெடுத்திருக்கிறது. அவரது ஆய்வுகளையும் உழைப்பையும் மையமாக வைத்து ஒரு 'Felicitation Volume' வெளியிட இருக்கிறோம். அதற்கு 'ஐராவதி' என்ற பெயரை வைத்துக்கொள்ள இசைந்திருக்கிறார். இதற்காகத் திட்டம் தயாரித்தபோது, அவருடன் பணியாற்றிய அறிஞர்களிடமிருந்து ஆய்வுக்கட்டுரைகளைப் பெற்றுத் தொகுத்து வெளியிடச் சில மாதங்கள் ஆகும் என்று தெரியவந்தது. அதுவரை வரலாறு.காமில் 'ஐராவதி சிறப்புப் பகுதி'யின் மூலம் நூலின் அறிமுகமும் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களைப் பற்றிய தகவல்களும் தொடர்ந்து இடம்பெறும்.
இப்பொழுதுதான் ஆய்வுலகின் முதல் படிக்கட்டில் ஏறியிருக்கும் இச்சிறுவர்களால் வாழ்நாள் சாதனை புரிந்த ஒரு இமயத்துக்கு மகுடம் சூட்ட முடியுமா? போதிய அனுபவம் இருக்கிறதா? அதனால்தான் திருச்சிராப்பள்ளி டாக்டர். மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் வழிகாட்டலின்படி செயல்பட முடிவெடுத்திருக்கிறோம். முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களை ஆசிரியராகவும் முனைவர் மா.இரா.அரசு மற்றும் முனைவர் மு.நளினி ஆகியோரை இணையாசிரியர்களாகவும் கொண்டு வெளிவரும் இந்நூலுக்கான பணிகள் இன்னும் பல ஆய்வு மற்றும் பதிப்பு நுணுக்கங்களை எங்களுக்குக் கற்றுத்தரும் என நம்புகிறோம்.
ஆகவே வாசகர்களே, விரைவில் எதிர்பாருங்கள்!! வரலாறு.காம் டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்துடன் இணைந்து பெருமையுடன் வழங்கும் 'ஐராவதி'!!
வழக்கம்போல உங்களின் ஆதரவைக் கோரும்
ஆசிரியர் குழு
1 Comments:
ஐராவத்திற்கு வருங்கால ஐராவதம் மரியாதை செய்கிறது.
சிறப்பான பணி. தங்களுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment
<< Home