பல்லவ மாமன்னர் மகேந்திரவர்மர் சிறப்பிதழ்
மூன்றாண்டுகள் முடிவில் நாங்கள் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்க்கிறோம். இரண்டாண்டுகளா? மூன்றாண்டுகளா? வரலாறு.காம் பிறந்து இரண்டு ஆண்டுகள் மட்டும் முடிந்திருந்தாலும், அதற்கு முன் ஒரு வருடம் கற்றவை விதைத்த நம்பிக்கை விதையில்தான் இதழ் மலர்ந்து வரலாற்றுத்தரு செழித்து வளர்ந்து 400 கனிகளை ஆன்லைனில் உங்கள் பார்வைக்குப் படர விட்டிருக்கிறது. இந்நிலையில், இதற்குத் தண்ணீர் ஊற்றியவர்களை நினைவு கூராமல் இருக்க முடியுமா? அதற்காகத்தானே யார் மறந்தாலும் காலதேவர் மறக்காமல் தேதியையும் மாதத்தையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறார். முதல் ஒரு வருடம் கற்றவை பாடத்திட்டத்திலிருக்கும் பாடங்கள் என்றால், பொன்னியின் செல்வன் குழுவினருடன் முதல் யாத்திரை சென்று வந்த பிறகு கற்றவை நுழைவுத்தேர்வுக்குத் தயார் செய்ததைப் போலாகும். வரலாற்றுப் பாடங்களைக் கற்றுக்கொண்டு நாங்கள் அப்படி ஒன்றையும் பெரிதாகச் சாதித்து விடவில்லை என்றாலும், வரலாற்று ஆய்வாளர்களின் முன் வைக்கப்படும் எங்கள் கேள்விகள் அலட்சியப்படுத்தப்படாமல் சற்று ஏறிட்டு நோக்கப்பட்ட பார்வையோடு பதிலிறுக்கப்படுவது எல்லோரும் பெறக்கூடிய வாய்ப்பல்ல என்பதை உணர்ந்திருக்கிறோம். எங்களுடைய இந்தத் தேடலுக்கு விடைதந்து தெளிய வைத்தவர்கள் நான்கு பேர். இது ஏற்கனவே சிலருக்குத் தெரிந்திருந்தாலும், புதியவர்களுக்காகச் சொல்லவேண்டியது எங்கள் கடமை.
மாமண்டூரில் மகேந்திரரின் குடைவரை அமைப்பை புரிந்துகொள்ள முயற்சிக்கும் வரலாறு டாட் காம் குழு (வெண்பாப் புலி கிருபா நீங்கலாக)இடமிருந்து வலம் - சே.கோகுல், ச.கமலக்கண்ணன், லலிதா (ம. இராம்), மா.லாவண்யா
முழுமுதற்காரணம் அமரர் கல்கி. இரா. கிருஷ்ணமூர்த்தி. எங்களுக்கு மட்டுமல்ல. இன்று வரலாற்றாய்வில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு மண்ணுலகச் சக்கரவர்த்திகள் இராஜராஜசோழரையும் மகேந்திரவர்மரையும் அறிமுகப்படுத்திய ஈடு இணையற்ற எழுத்துலகச் சக்கரவர்த்தி. பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் என்னும் பொந்திடை வைக்கப்பட்ட அக்கினிக்குஞ்சுகள் எக்காலத்திலும் அணையாமல் எதிர்காலத் தலைமுறைகள் அனைத்தின் நெஞ்சிலும் அக்கனலைப் பற்ற வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பொன்னியின் செல்வன் மட்டுமல்ல. பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்துக்கும் எங்கள் வளர்ச்சியில் பங்குண்டு.
கல்கி பற்ற வைத்த இந்த நெருப்பைத் தகுந்த காலம் வரும் வரை அணையாமல் பாதுகாத்தவர் எங்கள் பெரியண்ணன் திரு. சுந்தர் பரத்வாஜ். கருவுற்ற ஒரு தாய், அக்கரு வளர்ந்து தன் சொந்த பலத்தில் உலகை எதிர்கொள்ளும் நிலை வரும்வரை பாதுகாத்து, காலம் வந்தவுடன் பெற்றுத் தந்தையின் கையில் ஒப்படைப்பதைப் போல, இன்றும் சோழர் வரலாற்றில் ஆர்வமுள்ளவர்களுக்குத் தார்மீக பலமாக விளங்கி வரும் இச்சிவபாதசேகரர் எங்களுக்குக் கிடைத்தது நாங்கள் என்றோ செய்த புண்ணியத்தின் பலன். ஏற்கனவே பலமுறை பல கட்டுரைகளின் வாயிலாக நன்றி தெரிவித்திருந்தபோதும்கூட, இதை எழுதும்போதும் உள்ளம் நெகிழத்தான் செய்கிறது.
பெரியண்ணனின் அரவணைப்பிலும் வழிகாட்டலிலும் வளர்ந்து வந்த எங்களை அறிவூட்டும் தந்தையின் நிலையிலிருந்து தத்தெடுத்த முனைவர் இரா. கலைக்கோவன் மூன்றாமவர். நாங்கள் எதிர்கொண்ட வரிசையில்தான் மூன்றாவது மனிதரேயொழிய, அணுகுமுறையில் மூன்றாம் மனிதராக என்றுமே உணர்ந்ததில்லை. எங்களில் ஒருவராக, தந்தை - மக்கள் என்ற தலைமுறை இடைவெளியுடனோ, ஆசிரியர் - மாணவர்கள் என்ற மரியாதை கலந்த பயத்துடனோ இல்லாமல், அனைவரும் நண்பர்கள் என்ற உயர்ந்த உள்ளத்துடன் எங்களை வழிநடத்திச் செல்பவர். ஒருமுறைக்குப் பலமுறை உறுதி செய்யப்பட்ட உண்மைகள் மட்டுமே வரலாறு என்னும் மகுடம் தாங்கத் தகுதி படைத்தவை என்ற தாரக மந்திரத்துடன் ஆய்வுலகிற்குள் எங்களைக் கைப்பிடித்து உடன் அழைத்துச் செல்பவர்.
மூவர் வளர்த்த இந்த வேள்வித்தீயினால் யாராவது பயன் பெறவேண்டாமா? ஒவ்வொரு மாத வேள்வியின் முடிவிலும் கிடைக்கும் அவிர்பாகத்தைச் சுவைத்துவரும் வாசகர்களாகிய நீங்கள்தான் வரலாறு.காம் கட்டடத்தின் நான்காவது தூண். இதுவரை வெளியாகியுள்ள 25 இதழ்களுக்கும் தாங்கள் அளித்து வந்த ஆதரவு உள்ளம் நிறையச் செய்கிறது. படித்ததோடு மட்டும் நில்லாமல், கட்டுரைகளைப் பற்றிய ஆக்கபூர்வமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டது, அடுத்த இதழ்களைக் கவனத்துடன் வெளியிடப் பேருதவியாய் அமைந்தது. இதுவரை வெளியான 400 கட்டுரைகளுக்கும் தவறாமல் பின்னூட்டமளித்து, வரலாற்று ஆர்வலர்களை ஊக்குவிப்பதே தன் தலையாய பணி என்று நிரூபித்திருக்கிறார் பெரியண்ணன் சுந்தர் பரத்வாஜ்.
இங்கு இதுவரை முகம் காட்டாத ஒரு வாசகரைப் பற்றிக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. வரலாறு.காம் இதழை இதுவரை இரண்டே தடவைகள்தான் படித்திருக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் படித்த நேரம் எவ்வளவு தெரியுமா? மொத்தம் 42 மணிநேரங்கள். 24-அக்டோபர்-2005 அன்று மாலை 6:30 மணியிலிருந்து மறுநாள் மதியம் 3:30 மணி வரையிலும், 13-மே-2006 அன்று அதிகாலை 2:30 மணியிலிருந்து இரவு 10:30 மணி வரையிலும் சிறிதுகூட ஓய்வின்றி அதுவரை வெளியான அனைத்துக் கட்டுரைகளையும் படித்து முடித்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார். இதோ ஒவ்வொரு கட்டுரையையும் அவர் படித்த நேர அட்டவணை. அவரது ஐ.பி முகவரியிலிருந்து ஜப்பானில் வசிக்கிறார் என்று தெரிய வருகிறது. அவர் உடனடியாக ஆசிரியர் குழுவை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். ஜப்பானில் எந்த மூலையில் இருந்தாலும் சரி! அவரது இருப்பிடத்திற்கே நேரில் சென்று சந்தித்து நன்றி கூற கமலக்கண்ணன் தயாராக உள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில் நாங்கள் கற்றுக்கொண்டவைகளைவிட கற்க எண்ணி முடியாமல் போனவைதான் அதிகம். முதல் இரண்டு வருடங்களை விட இந்த வருடம் மேற்கொண்ட பயணங்களும் குறைவுதான். ஆனாலும், இராஜராஜீசுவரம் விமானத்தின் சிகரத்தைத் தொட எண்ணியிருந்தது ஈடேறியது அனைத்து இழப்புகளையும் ஈடு செய்து விட்டது. தற்பொழுது ஆசிரியர் குழுவினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருப்பதால் வரும் ஆண்டிலும் பயணங்கள் குறைவாகத்தான் இருக்கும் என்ற போதிலும், அவ்வப்போது மேற்கொள்ளும் பாரதப் பயணங்களைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வோம். பயணங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் அனுபவ அறிவைப் பெருக்கும் முதல் ஆசான் என்பது வரலாறு காட்டும் உண்மை. வரலாறு.காம் காட்டும் உண்மை. பல்லவ மாமன்னர் மகேந்திரவர்மரை சிவகாமியின் சபத்தின் வாயிலாக, கலைகளை ஆதரிக்கும் ஒரு அரசராக மட்டுமே அறிந்திருந்த எங்களுக்கு அவருடைய பல்வேறு பரிமாணங்களைப் புரிய வைத்து, இராஜராஜருக்கு இணையாக அவரது பிம்பத்தை எங்கள் உள்ளத்தில் உயர்த்தியது முனைவர் கலைக்கோவன் அவர்களின் 'மகேந்திரர் குடைவரைகள்' நூலுக்காக மேற்கொண்ட பயணங்கள்தான். அப்போது கற்றவற்றைச் சிறப்பிதழாக்கி உங்கள் முன் தவழவிட்டிருக்கிறோம்.
மகேந்திரவர்மரைப் பற்றி என்னென்ன பெருமைகள் சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளன?
திருச்சிராப்பள்ளி டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குனர் முனைவர் இரா.கலைக்கோவன், மகேந்திரரின் Personality study ஐ பேரறிவாளர் என்ற தலைப்பில் தொகுத்துள்ளார்.
மகேந்திரரின் விருதுப்பெயர்களில் ஒன்று சங்கீர்ணஜாதி. இது மகேந்திரரின் ஜாதியைக் குறிக்கிறதா அல்லது திறமையையா என்று லலிதா ஆராய்ந்துள்ளார்.
1400 வருடங்களுக்கு முன்பு மகேந்திரர் எழுதிய இந்து/சமண/பௌத்த மதங்களைக் கேலிசெய்யும் நகைச்சுவை நாடகங்கள் மத்தவிலாசம் மற்றும் பகவதஜ்ஜுகத்தைத் திறனாய்வு செய்து கமல், லலிதா, இலாவண்யா மற்றும் யக்ஞா வெளியிட்டுள்ளனர்.
விசித்திரச்சித்தர் முதலான எண்ணற்ற விருதுப்பெயர்களைக் கொண்ட மகேந்திரர் எந்தெந்த விதங்களில் அதற்குத் தகுதியானவர் என்று கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் விளக்கியுள்ளார் இலாவண்யா.
சங்க இலக்கியப் பசிக்கும் கதைநேரக் கொறித்தலுக்கும் கல்வெட்டு சொல்லும் ஒரு சிறுகதை மற்றும் ஒரு தொடர்கதையுடன் தக்க தீனி போட்டிருக்கிறார் கோகுல்.
பிறப்பால் அமெரிக்கராக இருந்தாலும், மகேந்திரர் மேல் கொண்ட காதலால் பல்லவர் வரலாற்றை ஆராய்ந்திருக்கும் பேராசிரியர் மைக்கேல் லாக்வுட், பல்லவ கிரந்த எழுத்துக்கள் தோன்றிய முறையை அலசிக் காயப்போட்டுள்ளார்.
மகேந்திரரின் குடைவரைகளுள் ஒன்றான விழுப்புரம் மாவட்டம் தளவானூரிலுள்ள சத்ருமல்லேசுவராலயத்திற்குப் பயணப்பட்டு வந்த இராம்நாத் குடைவரை அமைப்பை விளக்கியுள்ளார்.
சில இதழ்களுக்கு முன்பு வெளியான மகுடாகமம் - பரசிவம் - பொன்விமானம் பற்றிய கட்டுரை ஒன்றைப் பற்றித் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் முனைவர் இரா.கலைக்கோவன்.
கட்டுரைகளையும் அதில் சொல்லப்பட்ட கருத்துக்களையும் பற்றிய தங்கள் எண்ணங்களை இங்கோ அல்லது வரலாறு.காம் தளத்திலோ பின்னூட்டம் இட்டால், மிகவும் மகிழ்வோம்.
வழக்கம்போல் என்றும் உங்கள் ஆதரவைக் கோரும்
ஆசிரியர் குழு