Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் 
பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Varalaaru.com - Monthly Thamizh e-Magazine dedicated for History: தரிசனம் கிடைக்காதா!!!

Varalaaru.com - Monthly Thamizh e-Magazine dedicated for History

வரலாற்று ஆய்வாளர்களாக ஆக விரும்புபவர்கள் கற்றுக்கொள்ளும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி!

Sunday, August 19, 2007

தரிசனம் கிடைக்காதா!!!

வாசகர்களுக்கு வணக்கம்.

மூன்றாண்டுகளை நிறைவுசெய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வரலாறு.காம் இதழை வாழ்த்திய வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி கலந்த வணக்கங்கள்.

ஒரு வாசகர் குறிப்பிட்டிருந்ததுபோல், தொடர்ந்து மூன்றாண்டுகளாக எந்தவித இலாபநோக்கும் இல்லாமல், ஒற்றுமையுடன் 570 கட்டுரைகளைப் படைத்திருப்பதை ஒரு சாதனை என்றே சொன்னாலும், இச்சாதனையைவிட அதிக மகிழ்ச்சியை எங்களுக்கு அளிக்கக்கூடியது, இக்கட்டுரைகளினால் தாங்கள் பயன் பெற்றோம்/பெறுகிறோம் என்ற வாசகர்களின் மடல்களே. அந்தவகையில், இம்மூன்றாம் ஆண்டு எங்களை மகிழ்ச்சிக் கடலில் நீந்தவைத்தது என்றே சொல்லலாம்.

இதைவிடப் பேருவகையை அளித்த சம்பவம் ஒன்றும் இந்த மாத ஆரம்பத்தில் நடந்துள்ளது. மைசூரில் உறங்கிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்வெட்டுகளை மீண்டும் தமிழகத்திற்குக் கொணரும் முயற்சி ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த இதழில் குறிப்பிட்டிருந்ததைப்போல், மத்திய அரசின் கதவுகள் இப்பிரச்சினை கொண்டு தட்டப்பட்டிருக்கின்றன. அந்தக் கதவுகளும் உடனடியாகத் திறந்திருக்கின்றன. இப்பிரச்சினை தன் காதுக்கு எட்டிய உடனேயே மனிதவள மேம்பாட்டுத்துறையிடம் முறையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வைத்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் இதை முதல்வர்வரை கொண்டுசென்ற நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் அவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் இரா.நல்லகண்ணு அவர்களுக்கும் பேராசிரியர் அன்பழகனைச் சந்திக்கும் வாய்ப்பினை அமைத்துத் தந்த பேராசிரியர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்களுக்கும் இதற்காகப் பல ஆண்டுகளாகப் பல தளங்களின் வாயிலாகப் பாடுபட்டு வருபவரும் அரசின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றவருமான முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களுக்கும் இதன் முக்கியத்துவம் கேட்கப்பட்ட போதெல்லாம் சளைக்காமல் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் விளக்கிக்கூறிய முனைவர் சு.இராஜவேலு அவர்களுக்கும் வரலாறு.காம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் கல்வெட்டாய்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரையில் இம்முயற்சி நன்றியுடன் நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இம்மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் அதேவேளையில், தாய்மொழிமீது பற்றுக்கொண்ட தமிழர்களின் நெஞ்சில் இன்னும் தணியாத ஏக்கமாக உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியும் வருத்தத்துடன் கூறவேண்டியிருக்கிறது.

திருநெல்வேலியிலிருந்து 24 கி.மீ தொலைவிலுள்ள ஆதிச்சநல்லூரில், அப்போதைய தொல்லியல்துறை அதிகாரியான முனைவர் தியாக.சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் முதுமக்கள் தாழி ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்ட செய்தி 17-2-2005ம் தேதியிட்ட 'தி இந்து' நாளிதழில் வெளியிடப்பட்டது. அந்தத் தாழியின் உட்பகுதியில் இருக்கும் எழுத்துக்கள் தெளிவாகத் தெரியாத நிலையில், 'க ரி அ ர வ [ன] ட' என்ற தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்று புகைப்படத்தின்மீது கையால் எழுதப்பட்டுள்ளன. மைசூர் மத்திய தொல்லியல் துறை (ASI) இன் முன்னாள் இயக்குனரான முனைவர். M.D.சம்பத் அவர்கள் குத்துமதிப்பாகப் படித்ததாகவும், அதில் 7 எழுத்துக்கள் இருப்பதாகவும் அதே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'Preliminary thermo-luminescence dating என்ற முறைப்படி, இப்பானை கி.மு 500ஐச் சேர்ந்ததாகலாம். இருப்பினும், நம்பகமான முறையான Corban Dating தான் உறுதி செய்யவேண்டும்' என்று திரு.சத்தியமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்-பிராமி ஆய்வாளர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும், 'The claim on the date of the script and the assertion that it is in Tamil-Brahmi will be subjected to the scrutiny of scholars in the field.' என்ற வாசகத்தையே அழைப்பிதழாக ஏற்று, 'நம் தமிழ் எழுத்து' என்ற பேருள்ளத்துடன் அறிஞர்களும் இப்பானையை நேரில் கண்டு ஆய்வு செய்ய முயன்றனர். ஆனால், ஆய்வு செய்ய விழைந்த அறிஞர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆய்வு செய்ய அனுமதி கிடைக்காமை அவர்தம் நெஞ்சில் ஆறாத வடுவாக மாறியது.

22-9-2006ம் தேதி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'Recent discoveries and their impact on south indian history' என்ற கருத்தரங்கில் 'பிராமி கல்வெட்டுகளின் தந்தை' என்று அழைக்கப்படும் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் திரு. நடன காசிநாதன் அவர்களும் தங்களுக்கு அனுமதி கிடைக்காமையை வெளிப்படையாகத் தெரிவித்தனர். தற்போதைய தொல்லியல்துறை அதிகாரி முனைவர் சத்தியபாமா அவர்கள், ஆதிச்சநல்லூர்ப் பானையின் உட்புறத்தில் எழுத்துக்கள் ஏதும் இல்லை என்று அறிவித்ததாகப் பின்னர் அதே கருத்தரங்கில் திரு. ஐராவதம் மகாதேவன் தெரிவித்தார். முன்பு எழுத்து இருக்கிறது என்று சொன்னவர்களின் பக்கம் அறிஞர்களின் பார்வை திரும்பியபோது, Corban Dating க்காகப் பானை புதுடெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு கூடிய விரைவில் வரும் என்று பதிலளிக்கப்பட்டது.

பின்னர், கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, நெய்வேலியில் நடந்த 'தமிழின் தொன்மையும் தமிழர் பெருமையும்' என்ற கருத்தரங்கில் முனைவர் மார்க்சிய காந்தி அவர்கள் தாம் நேரடியாகச் சென்று தாழியைக் கண்டதாகவும், ஆனால் அதனுள் எழுத்துப்பொறிப்புகளோ, அதற்கான அடையாளங்களோ ஏதுமிருக்கவில்லை என்றும் அனைத்து அறிஞர்களின் முன்னிலையிலும் அறிவித்தார். அதே கருத்தரங்கில், தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனரான முனைவர். நடன காசிநாதன் அவர்கள், தமக்கு ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்பட்டு, பானை காட்டப்படாததையும் தெரிவித்தார். அரசு இயந்திரங்களுக்கே உரித்தான உட்கட்சி அரசியல் தமிழின் பெருமையைப் பறைசாற்றும் தடயத்திலும் மூக்கை நுழைக்க வேண்டுமா என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கவலை. அதுமட்டுமல்ல. இந்த நிகழ்வுகள் தமிழின் தொன்மையால் பெருமை கொள்ளும் தமிழர்களின் மனதிலும் கீழ்க்கண்ட கேள்விகளை விதைத்திருக்கின்றன.

1. ஆதிச்சநல்லூரில் எழுத்துக்கள் உள்ள ஒரு பானை அகழ்ந்தெடுக்கப்பட்டதா?
2. எழுத்துப் பொறிப்புகள் இருந்திருந்தால், அதைப் பார்க்க ஏன் பிராமி அறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது?
3. பின்னர் எழுத்துக்களே இல்லை என்று அறிவிக்கப்பட்டது எதற்காக?
4. கண்டுபிடிக்கப்பட்டபோது எழுத்துப்பொறிப்புகள் இருந்திருந்தால், மார்க்சிய காந்தி பார்க்கும்போது காணாமல் போனது எப்படி? அல்லது, அவரிடம் காட்டப்பட்டது வேறொரு பானையா? ஏன் அவ்வாறு காட்டப்பட்டது?
5. முன்னர் எழுத்துக்கள் இருந்தன என்று சொன்னது உண்மையா அல்லது பின்னர் எழுத்துக்கள் இல்லை என்று சொன்னது உண்மையா?
6. கையில் இருக்கும் தடயத்தை வெளிப்படுத்த ஏன் இத்தனை தயக்கங்கள்?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழின் தொன்மையை உலகறிய விடாமல் செய்யும் தமிழின எதிரிகளின் மடத்தனமான சதித்திட்டமும் இதில் ஒளிந்திருக்கிறதா என்ற சந்தேகமும் அறிஞர்களின் மத்தியில் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

இத்தனை கேள்விகளுக்கும் பதிலை எங்கே தேடுவது, யாரிடம் போய்க் கேட்பது? தன் தாய்மொழியின் பெருமையை அறிந்துகொள்ளக்கூட அருகதை இல்லாமல் போய்விட்டானா தமிழன்? தன் முன்னோர்கள் எழுதிய எழுத்தைக் காணும் பேறு கூடக் கிடைக்காததற்கு அவன் செய்த பாவம்தான் என்ன? கி.மு 500லேயே தமிழ் எழுத்துக்கள் சாதாரண மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்று பெருமையுடன் தலைநிமிர்ந்து நடைபோட்ட தமிழனுக்குத் தான் தாய்மொழிமீது வைத்த பற்றிற்காகக் கிடைக்கும் பரிசு, 'பொய்யான வீண்பெருமை' என்ற மற்ற மொழி, இனத்தவரின் நகையாடல்தானா? இந்த எழுத்துக்கள் ஆய்வுலக வெளிச்சம் காண்பது எப்போது? ஒவ்வொரு தமிழனும் அதைப்பார்த்துப் பெருமைப்படுவது என்றைக்கு? எழுத்துக்கள் இருந்தனவா அல்லது இல்லையா? எது உண்மை?

அன்புடன்
ஆசிரியர் குழு

3 Comments:

Blogger மஞ்சூர் ராசா said...

மூன்றாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வரலாறு வலைப்பதிவுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பதுடன் மேன்மேலும் வளர வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

August 19, 2007 7:21 PM  
Blogger Thamizhan said...

தமிழரின் வரலாற்றைத்

தரணியர் அறிந்திட

தளரா துழைத்திடும்

தங்கத் தமிழர்களே!

தங்கள் உழைப்பிலே

உண்மைகள் அறிந்திட

நன்றியில் வாழ்த்திடும்

நண்பர்கள் வரைகிறோம்!

August 19, 2007 7:57 PM  
Blogger வெற்றி said...

நன்றி. தங்களின் பணி மகத்தானது.

August 19, 2007 9:15 PM  

Post a Comment

<< Home