Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் 
பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

Varalaaru.com - Monthly Thamizh e-Magazine dedicated for History: ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

Varalaaru.com - Monthly Thamizh e-Magazine dedicated for History

வரலாற்று ஆய்வாளர்களாக ஆக விரும்புபவர்கள் கற்றுக்கொள்ளும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி!

Tuesday, March 20, 2007

ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

அன்பார்ந்த நேயர்களே!

தமிழனின் வரலாற்றை எழுத நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதுமில்லை என்று திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் கேள்விக்குப் பதிலளித்த திரு.மதன் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் இது. இதுபோல் எண்ணிக் கொண்டிருக்கும் மற்ற பல தமிழர்களும் உண்மையை உணர்ந்து கொள்ளும் விதமாக இங்கே வெளியிடுகிறோம்.

கேள்வி

வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்.

'வந்தார்கள்... வென்றார்கள்' என்ற தலைப்பில், மயிலாசனப் பேரரசர்கள் பற்றிச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதிய தாங்கள், சோழப் பேரரசு பற்றியும் அதுபோன்ற ஆதாரபூர்வ நூல் ஒன்றை எழுதினால், பெரும் பங்களிப்பாக இருக்குமே?!

பதில்

கி.மு.44ல் கொல்லப்பட்ட ஜூலியஸ் சீசர், தன் படையெடுப்புகளை நுணுக்கமாக விவரித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் (ஏழு வால்யூம்கள்). ரோம், கிரேக்க வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அற்புதமான புத்தகம் (3 வால்யூம்கள்) எழுதியிருக்கிறார் ப்ளூடார்க். பாபர், 'பாபர்நாமா' என்னும் தன் வாழ்க்கை வரலாற்றில், இந்திய வெயில், மாம்பழங்கள் பற்றி யெல்லாம்கூட விவரித்திருக்கிறார். ஜஹாங்கீர் தினமும் என்னென்ன டிபன் சாப்பிட்டார் என்பது பற்றிய குறிப்புகள்கூட உண்டு! ஆனால்...

தமிழ் மன்னர்களைப் பற்றிப் பாடல்களும், கல்வெட்டுகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை. புலவர்களுக்குத் தமிழ் மன்னர்கள் நிறைய மதுவும், பொற்காசுகளும் தந்தது உண்மை. விளைவு... உணர்ச்சிவசப்பட்ட புலவர்கள் அதீதமான கற்பனை செய்து மன்னர்களைப் பாராட்டிப் பாடல்களை எழுதிக் குவித்தார்கள். 'வெற்றி பெற நாடுகள் இல்லாமல், தோள்கள் தினவெடுக்க, வாளை உருவியவாறு கரிகாலன் இமயமலை வரை ஆட்கொள்ளக் கிளம்ப... இமயம், கடவுள்கள் வசிக்கும் மலை என்பதால், அதைக் கரிகாலனால் தாண்ட முடியவில்லை. எனவே, இமயமலை மீது மிகப் பெரிய புலிச் சின்னத்தைச் செதுக்கிவிட்டுத் திரும்பினார் அந்த மாவீரன்!' என்று சிலப்பதிகாரத்தில் ஒரு பாடல் மிகையாகப் புகழ்கிறது! உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை! தெருவில் நின்ற கரிகாலனுக்குப் பட்டத்து யானை மாலை அணிவித்து முடி சூட்டியதும், சிறையிலிருந்து தப்பித்தபோது கரிகாலனின் கால்கள் தீயால் பொசுங்கிக் 'கரிகாலன்' என்று பெயர் வந்ததும் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லாத வெறும் கற்பனையே! இதற்கெல்லாம் காரணம்... தமிழ்நாட்டில் முதலில் கவிதைகள்தான் தோன்றின! உரைநடை (Prose) எழுதப்பட்டது பிற்பாடுதான்!

நிலைமை இப்படியிருக்க, எந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு நாம் நம் வரலாற்றை எழுத முடியும்? கற்பனை கலந்த நாவல் (பொன்னியின் செல்வன் மாதிரி) வேண்டுமானால் எழுதலாம்!

கடிதம்

திரு. 'ஹாய்' மதன் அவர்களுக்கு,

வணக்கம்.

7-3-07 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் 'ஹாய் மதன்' பகுதியில் திரு. வெ.இறையன்பு அவர்கள் கேட்டிருந்த கேள்விக்குத் தாங்கள் பதிலளித்திருந்த விதம் எங்களை மிகவும் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. 'வந்தார்கள் வென்றார்கள்' நூலைப் படித்துவிட்டுச் சரித்திரத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களை நாங்கள் அறிவோம். அதைப் படித்த ஒவ்வொரு தமிழனுடைய உள்ளத்திலும் தோன்றிய கேள்விதான் திரு. இறையன்பு அவர்களின் வாயிலாக வெளிப்பட்டுள்ளது. அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக வரலாற்றின்மீது ஈடுபாடு கொண்டிருக்கும் அவருக்கும் இதே அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறோம். அப்புத்தகத்தின் இறுதியில் தாங்கள் கொடுத்திருந்த துணைநூல் பட்டியல் தங்களின் உழைப்பைப் பறைசாற்றியது. அதைப் பார்த்துப் பிரமித்துப்போன ஒவ்வொரு வாசகனும் தங்களை ஓர் உயர்ந்த அறிஞரின் நிலையில் வைத்துத் தத்தம் ஐயங்களைப் போக்கிக் கொள்ளத் தங்களை நாடுகிறான். அப்படிப்பட்ட தங்களின் தமிழக வரலாறு பற்றிய சிந்தனை இப்படிப்பட்டதாக இருக்குமென்று சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. சங்க இலக்கியங்கள் வெறும் பாராட்டுப் பத்திரங்கள் என்ற தவறான கருத்து பல தமிழர்களின் உள்ளங்களில் பதிந்து கிடக்கிறது. தமிழக வரலாற்றைப் பற்றித் தமிழர்களே இத்தகைய மதிப்பீடுகள் கொண்டிருந்தால், புரிந்து கொள்ளவே மறுக்கும் வட இந்திய மற்றும் அண்டை மாநில ஆய்வாளர்களை என்ன சொல்வது? தாங்கள் கூறிய பதிலை வேறொரு சாதாரண மனிதன் கூறியிருந்தால், அதைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், தாங்கள் கூறுபவை அனைத்தும் உண்மையென்றும், முறையாக ஆராய்ந்த பிறகே கூறுகிறீர்கள் என்றும் நம்பும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்குத் தவறான தகவல் சென்று சேரக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் விளைந்ததுதான் இக்கடிதம். இதை எந்த வகையில் புரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பது தங்களைப் பொறுத்தது. சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் கடமை.

தமிழ் இலக்கியங்களில் கற்பனையோ மிகைப்படுத்தப்பட்ட செய்திகளோ இல்லவே இல்லை என்பதல்ல எங்கள் வாதம். சற்று ஆழ்ந்து வாசித்தால் கற்பனைகளை எளிதாக இனங்கண்டு விடலாமே என்பதுதான் எங்கள் ஆதங்கம். மன்னர்கள் புலவர்களுக்குப் பொற்காசுகள் தந்ததென்னவோ உண்மைதான். ஆனால் நிறைய மது கொடுத்திருக்கிறார்கள் என்கிறீர்களே, அதற்கு என்ன ஆதாரம் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? பொருள் தரும் மன்னர்களைப் பாராட்டிப் பாட்டெழுதியதால் கற்பனை மிகுந்தது என்கிறீர்கள். அடையாளம் தெரியாத தலைவனையும் தலைவியையும் தோழியையும் வைத்து அகத்திணைப் பாடல்களைப் புனைந்த புலவர்களைப் புரந்தவர்கள் யார்? அவர்கள் அத்தகைய பாடல்களை இயற்ற வேண்டிய அவசியம் என்ன? தொல்காப்பியமும் திருக்குறளும், மதுவுக்கும் பொன்னுக்கும் மயங்குபவர்களால் எழுதிவிடக் கூடியவையா? சிலப்பதிகாரம் ஒரு குடிமக்கள் காப்பியம். மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் கூறுவதுடன் சுவைக்காக வேண்டிச் சில வர்ணனைகளும் கலந்தே இருக்கும். ஏதோ ஒன்றிரண்டு கற்பனைகளைக் காரணம் காட்டி அதைப் புறந்தள்ளிவிட்டால், அதுகூறும் ஆடற்கலை மற்றும் இசைக்கலை நுணுக்கங்களை ஆழ்ந்து அனுபவித்து மகிழ்வது எங்ஙனம்? அது வலியுறுத்தும் நீதிகளை மனதிற்கொண்டு வாழ்வைச் செம்மையுறச் செய்வது எவ்விதம்?

அந்தந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் எழுதி வைத்த நூல்களையும் குறிப்புகளையும் கொண்டுதான் வரலாற்றை அப்படியே எழுதவேண்டும் என்றால், ஆராய்ச்சி என்ற ஒரு துறை எதற்காக? பழைய கள்ளைப் புதிய மொந்தையில் தருபவருக்குப் பெயர்தான் வரலாற்றறிஞரா? ஜூலியஸ் சீசரும் ப்ளூடார்க்கும் பாபரும் ஜஹாங்கீரும் விட்டுச் சென்ற செய்திகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் நீலகண்ட சாஸ்திரியாரும் சதாசிவ பண்டாரத்தாரும் இன்னும் பிற அறிஞர்களும் தொகுத்து வைத்திருக்கும் சோழர் வரலாறு தாங்கள் அறியாததா? அவர்களையெல்லாம் அவமானப் படுத்துவது போலல்லவா அமைந்திருக்கிறது தங்கள் பதில்!! ஒரே இடத்தில் குவித்து வைக்கப்படாமல், பல்வேறு கோயில்களில் பரவலாகக் கல்வெட்டுகளாக வெட்டி வைத்திருப்பதாலும் அந்நியப் படையெடுப்பு மற்றும் திருப்பணிகளின்போது ஏற்பட்ட பாதிப்புகளாலும் சரித்திரச் சங்கிலியின் ஓரிரு கண்ணிகள் இன்னும் அகப்படாமல் போயிருக்கலாம். அதற்காகத் தமிழனுக்கு வரலாறே இல்லையென்ற முடிவுக்கு வருவது முறைதானா? வரலாறு இல்லாமல் வரலாற்றுக் கற்பனை நாவல் ஏது? கற்பனை செய்வதற்கும் ஏதாவது ஒரு Reference வேண்டுமே! கற்பனையில் உதித்த வேற்று கிரகவாசி என்றாலும், இரண்டு கை, இரண்டு கால்களுடனும்தானே கற்பனை செய்ய முடிகிறது?

தமிழக வரலாற்றைப் பற்றிப் பாடல்களும் கல்வெட்டுகளும் மட்டுமே மிஞ்சியிருப்பதாக குறைப்பட்டிருக்கிறீர்கள். ஏன்? இந்த இரண்டும் போதாதா? இவற்றில் விடுபட்டவற்றை நிரப்பத்தான் செப்பேடுகளும் சாசனங்களும் இருக்கின்றனவே! அதற்கும் மேலாக, கட்டடக்கலையும் சிற்பக்கலையும் பழங்கால ஓவியங்களும் கண்ணிருப்பவர்களுக்குத் தருமே ஆயிரம் செய்திகளை! பெரும்பாலான கல்வெட்டுகள் நிவந்தங்களைப் பற்றியதாகவே இருந்தாலும், மண்ணிலிருந்து தங்கத்தையும் நிலக்கரியையும் பிரித்தெடுப்பது போல் தமிழக வரலாற்றைக் கவனமுடன் வடித்தெடுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுடன் தங்களுக்கு நிச்சயம் தொடர்பிருக்கும். அவர்களெல்லாம் இல்லாத ஒன்றைத் தேடி வெட்டி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறீர்களா? சங்கப்பாடல்களும் கல்வெட்டுகளும் பொய்யுரைப்பவையெனில், 'உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை!' என்ற தங்களின் கூற்று எந்த விதத்தில் மெய்? எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு இதை எழுதினீர்கள்? இமயத்திலிருக்கும் Chola pass என்ற இடத்திற்குத் தாங்கள் தரும் விளக்கம் என்ன?

சங்க இலக்கியங்களில் வரலாறு இல்லை என்கிறீர்களே! இதோ எடுத்துக்காட்டுகிறோம் இரண்டு அகநானூற்றுப் பாடல்களை!

அகநானூறு - 126ம் பாடல் - தலைமகன் கூற்று - நக்கீரர் இயற்றியது - மருதத்திணை

நினவாய் செத்து நீ பல உள்ளிப்,
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
மால் இருள் நடுநாள் போகி, தன் ஐயர்
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகித்,
திதியனொடு பொருத அன்னி போல

விளிகுவை கொல்லோ, நீயே கிளி எனச்
சிறிய மிழற்றும் செவ்வாய், பெரிய
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,
மின் நேர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?

அகநானூறு - 145ம் பாடல் - செவிலித்தாய் கூற்று - கயமனார் இயற்றியது - பாலைத்திணை

வேர் முழுது உலறி நின்ற புழல்கால்,
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொன் தலை ஓதி
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு
வாள்வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார,
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும்
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர்
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,

கடு நவைப் படீஇயர் மாதோ - களி மயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பால்
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது,
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்,
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என்
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!

'கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று' (பொருள் : கடலைவிடப் பெரிதாகத் தோற்றமளிக்கும் காவிரி) , 'பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்' (பொருள் : ஊர்மக்கள் விலையாகத்தர முன்வந்த நெல்லைவிட அவர்கள் அணிந்திருக்கும் முத்துக்களின் அளவு விலை பெறும் அவள் வைத்துள்ள கோடுகளையுடைய வாளை மீன்) போன்ற வரிகள் பாரதத்தின் இன்றைய புவியியல் மற்றும் பொருளாதார நிலையை மனதில் கொண்டு விளங்கிக் கொள்ள முயன்றால், உயர்வு நவிற்சி அணியாகத் தோன்றலாம். ஆனால், 'அப்போவெல்லாம் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடும்' என்ற நம் தாத்தா பாட்டிகளின் மொழியைக் கேட்கும் வாய்ப்பமைந்திருந்தால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காவிரியின் தீரம் என்னவென்று எளிதாகப் புலப்படுமே! அதற்குப் பின்னும் இதைக் கற்பனையென்று புறந்தள்ள மனம் வருமா? காவிரியின் பிரவாகத்தை வர்ணிக்கும் சங்கப்பாடல்கள் ஒன்றா, இரண்டா? அவையனைத்துமே கற்பனையில் உதித்தவையா?

முறத்தால் புலியை விரட்டியதையும், கால் பொசுங்கிக் 'கரிகாலன்' ஆனதையும் வேண்டுமானால் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பாடல் வரிகளுக்குள் இலைமறை காயாகப் புதைந்து கிடக்கும் பொக்கிஷங்களையும் நோக்க மறுத்தால், இழப்பு நமக்குத்தான். இரண்டு பாடல்களுக்கும் பொதுவாக இருக்கும் வரிகளை ஆராய்வோமா? 'அன்னிக்கும் திதியனுக்கும் போர் நடந்தது. நடந்த இடம் குறுக்கைப் பறந்தலை. திதியனின் காவல் மரமான புன்னையை வெட்டித் திதியனை அவமானப்படுத்த முயன்றார் அன்னி. வேண்டாம் எனத் தடுத்தார் எவ்வி. கேட்காமல் வெட்டி வீழ்த்தினார் அன்னி. அடுத்து நடந்த போரில் அன்னி கொல்லப்பட்டார்'. இரண்டு வெவ்வேறு புலவர்களால் வெவ்வேறு சூழ்நிலைகளில் பாடப்பட்ட இரு பாடல்களில் ஒரே செய்தி நினைவு கூரப்படுகிறது. இது பரிசிலுக்காக மன்னரை வாழ்த்திப் பாடியதும் அன்று. அப்படியே பாடியிருந்தாலும் யார்தான் இதற்குப் பரிசளித்திருப்பார்கள்? அன்னியா? திதியனா? எவ்வியா? பரிசளிக்கும் அளவிற்கு இதில் என்ன புகழ்ச்சி இருக்கிறது? இவையெதுவும் இல்லாத நிலையில், உண்மையாகவே அன்னிக்கும் திதியனுக்கும் போர் நடந்ததால்தானே இரண்டு புலவர்களும் ஒரே நிகழ்ச்சியைப் பாடியுள்ளனர்? அல்லது இருவருமே ESPயை வைத்துக் கனவு கண்டு பாடல்கள் புனைந்தனரா?

எங்கள் வரலாறு.காம் மின்னிதழ் 30 ஆம் இதழில் சங்கச்சாரல்-13 என்ற கட்டுரையில் இவ்விரண்டு பாடல்களும் கூறும் மற்ற கருத்துக்களையும் விரிவாக அலசியுள்ளோம். இது மட்டுமல்ல. சமீபத்தில் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத்துறைத் தலைவர் பேராசிரியர் திரு.கா.இராஜன் அவர்கள் தலைமையில் அகழ்வாய்வு செய்யப்பட்ட சங்ககால நடுகல் ஒன்றின் செய்தி சங்க இலக்கியங்களில் இருக்கும் குறிப்புகளுடன் பொருந்தி வந்ததும், அதன்பின் இலக்கியங்கள் குறிப்பிடும் 'எழுத்து' என்பது 'படங்கள்' அல்ல, தமிழ் அரிச்சுவடி எழுத்துக்களே என்று தங்களைப்போல் சங்க இலக்கியங்களைக் குறைத்து மதிப்பிட்ட பிற பேராசிரியர்கள் ஒப்புக்கொண்டதும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட உண்மைகள்.

கல்வெட்டுகள் மட்டும் என்ன? அவையும் தகவல் சுரங்கங்களே என்று நிரூபிக்கக் கடலளவு ஆதாரங்கள் உள்ளன. இக்காலக் கோயில்களில் ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதன் ஒளியையே மறைக்கும் அளவுக்குத் தங்கள் பெயரை எழுதி வைத்துவிடும் மாக்களின் செயலுடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுக் கண்ணிருந்தும் குருடர்களாகின்றனர் சிலர். ஆனால், உண்மை அவ்வாறில்லை என்று மீண்டும் ஒருமுறை எங்கள் மின்னிதழின் 31 ஆம் இதழின் சோழதேசத்தில் ஒரு சேரர் கோயில் - 2 என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளோம். பழுவூரை ஆண்ட பழுவேட்டரையர்களின் வரலாற்றை எப்படிக் கல்வெட்டுகள் நமக்குத் தருகின்றன என்று விளக்கும் அந்தக் கட்டுரையின் சுருக்கத்தை மீண்டும் இங்கே தங்களின் பார்வைக்கு வைக்கிறோம்.

பழுவேட்டரையர்களுடன் தொடர்புடைய சோழர் கல்வெட்டுகளின் அட்டவணை :-



















எண்கல்வெட்டு இருக்குமிடம்கோயில் பெயர்சோழமன்னர்ஆட்சியாண்டுபழுவேட்டரையர்செய்திஆண்டறிக்கை எண்
1திருவையாறுபஞ்சநதீசுவரர் கோயில்முதலாம் ஆதித்தர்10குமரன் கண்டன்நிவந்தமாக அளிக்கப்பட்ட நிலத்தின் கிழக்கு மற்றும் வடக்கெல்லைகளில் இருந்த நிலம் குமரன் கண்டனுடையதுSII Volume 5, No. 523
2மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் ஆதித்தர்12குமரன் கண்டன்'குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்ற சிறப்புடன் குறிப்பிடப்படுகிறார்SII Volume 3, No. 235
3திருவையாறுபஞ்சநதீசுவரர் கோயில்முதலாம் ஆதித்தர்19குமரன் மறவன்இவர் நம்பி மறவனார் என்று குறிப்பிடப்படுவதால், இளவரசராக இருந்தார் என்று கொள்ளலாம்SII Volume 5, No. 537
4மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் ஆதித்தர்22குமரன் மறவன்இதிலும் 'குமரன் மறவன் பிரசாதத்தினால்' என்று குறிப்பிடப்படுகிறார்SII Volume 8, No. 298, ARE 355 of 1924
5லால்குடிசப்தரிஷீசுவரர் கோயில்முதலாம் பராந்தகர்5குமரன் மறவன்'அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன்' என்று பெருமைப்படுத்துகிறதுSII Volume 19, No. 146
6திருப்பழனம்மகாதேவர் கோயில்முதலாம் பராந்தகர்6குமரன் மறவன்குமரன் மறவனோடு தீப்பாஞ்ச அழகியான் பற்றிய தகவலைத் தருவதன் மூலம் குமரன் மறவனின் காலம் முடிந்துவிட்டதைக் குறிப்பிடுகிறதுSII Volume 19, No. 172
7கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்முதலாம் பராந்தகர்12கண்டன் அமுதன்வெள்ளூர்ப் போரில் பராந்தகருக்காகப் போரிட்டு வெற்றி பெற்ற செய்திARE 231 of 1ட்926
8திருவையாறுபஞ்சநதீசுவரர் கோயில்முதலாம் பராந்தகர்14கண்டன் அமுதன்இது 'வெள்ளூர்ப் போரில் கண்டன் அமுதன் இறந்தார்' என்ற அறிஞர்களின் கருத்தை மறுக்கிறதுSII Volume 5, No. 551
9மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்சுந்தரசோழர்5மறவன் கண்டன்இவரது கொடை, ஆட்சிமுறை, வரியமைப்பு பற்றிப் பேசுகிறதுSII volume 5, No. 679
10கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்உத்தமச்சோழர்9மறவன் கண்டன்இவரது மறைவைத் தெரிவிக்கிறதுSII Volume 19, No. 237, 238
11உடையார்குடிஅனந்தீசுவரர் கோயில்உத்தமச்சோழர்12கண்டன் சத்ருபயங்கரன்இவர் மறைவுக்காக இவர் தமையன் கண்டன் சுந்தரசோழன் இக்கோயிலில் ஐந்து அந்தணர்களை உண்பிக்கவும் நந்தா விளக்கெரிக்கவும் கொடையளித்தான்SII Volume 19, No. 305
12கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்உத்தமச்சோழர்13கண்டன் சுந்தரசோழன்இக்கோயிலில் ஆடவல்லான் திருமேனியை ஊசலாட்ட வாய்ப்பாக ஒரு மண்டபம் அமைத்துக் கொடுத்தார். கல்வெட்டுகளின்வழி 'ஆடல்வல்லான்' என்ற பெயரை முதன்முதலாக வரலாற்றுக்கு அறிமுகப்படுத்தியவர்SII Volume 5, No. 681
13மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்உத்தமச்சோழர்15கண்டன் மறவன்நிவந்தம் அளித்ததுSII Volume 8, No. 201
14மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் இராஜராஜர்3கண்டன் மறவன்கொடும்பாளூரையாண்ட இருக்குவேளிர் குலத்திற்கும் பழுவேட்டரையர் குலத்திற்கும் ஏற்பட்ட மண உறவைத் தெரிவிக்கிறதுSII Volume 5, No. 671
15மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் இராஜராஜர்15கண்டன் மறவன்இவரைப்பற்றிக் குறிப்பிடும் கடைசிக் கல்வெட்டு இதுவேARE 363 of 1924
16கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்முதலாம் இராஜேந்திரர்8யாருமில்லைபழுவேட்டரையரின் பணிப்பெண் வீராணன் ஒற்றியூர் இக்கோயிலுக்களித்த கொடையைக் கூறுகிறதுSII Volume 5, No. 665


மேற்கண்ட 16 கல்வெட்டுகளும் நிவந்தங்கள் கொடையளிக்கப்பட்ட செய்தியையே தெரிவித்தாலும், 'இவ்வளவு பொன்னும் பொருளும் கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு கல்வெட்டையும் அந்தந்த மன்னர் உடனிருந்து சரிபார்த்திருக்கவா போகிறார்?' என்று 23ம் புலிகேசியைப் போல் எல்லா மன்னர்களையும் எண்ணிக்கொள்ளும் சில அறியாப்பிள்ளைகளின் வாதத்திற்காகப் பொன்னையும் பொருளையும் விட்டு விட்டு, பழுவூரை ஆண்ட அரசர்களின் பெயர்களை மட்டும் சோழ மன்னர்களின் ஆட்சியாண்டுடன் ஒப்பிட்டுக் கீழ்க்கண்ட முடிவிற்கு வரலாம்.

1. கல்வெட்டுகளின் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்ட பழுவேட்டரையர்களின் காலம் கி.பி 881 இல் இருந்து கி.பி 1020 வரை.

2. பழுவூரை ஆண்ட மன்னர்களின் வரிசைக்கிரமம் குமரன் கண்டன், குமரன் மறவன், கண்டன் அமுதன், மறவன் கண்டன், கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் என்பதாகும்.

3. இந்த வரிசையில் First name, Last name logic-ஐ வைத்துப் பார்த்தால், பழுவேட்டரையர்களின் தலைமுறையைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாமே!



வம்சாவளி மட்டுமா? பழுவூரின் அன்றைய பொருளாதாரநிலை, சமூக அமைப்பு, கோயில்களின் நிலை, விவசாயம் மற்றும் பாசனம் பற்றிய குறிப்புகள், கலை வளர்ந்த விதம், விளையாட்டுக்களிலும் வீரத்தைப் போற்றிய சூழல், அண்டை நாடுகளுடன் இருந்த தொடர்புகள், மற்ற அரசர்களுடனான திருமணத் தொடர்புகள், பங்கேற்ற போர்கள் போன்ற எண்ணற்ற விவரங்களை, திருச்சிராப்பள்ளி டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குனர் முனைவர்.இரா.கலைக்கோவன் அவர்களால் எழுதப்பட்ட 'பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம்' என்ற நூலில் பெறலாம்.

கல்வெட்டுகளைப் படிப்பது என்பது எளிதான வேலை. கண்பார்வை நன்றாக இருக்கும் எவராலும் முடியக்கூடிய ஒன்று. ஆனால் அக்கல்வெட்டுகள் தரும் செய்திகளைத் தொகுத்து வகுத்து வரலாற்றை வடிப்பதென்பது, முன்முடிவுகள் ஏதுமின்றி, வரலாற்றைத் தத்தம் கொள்கைக்கேற்ப வளைக்க வேண்டும் என்ற கபடமின்றி அணுகும் ஆய்வாளர்களால் மட்டுமே முடியும். அதனால்தான் புகழ்விரும்பி ஆய்வாளர்களால் வெகுஜனப் பத்திரிகைகளில் தரப்படும் அரைகுறைச் செய்திகளைச் சாதாரண மக்களால் எளிதாகத் தவறென்று நிரூபித்து, 'வுடறார் பாரு கப்ஸா!' என்று எள்ளி நகையாட முடிகிறது. என்னதான் ஆய்வாளர்கள் பாடுபட்டு ஆராய்ந்து வரலாற்றுச் செய்திகளை வெளியிட்டாலும், அச்செய்திகள் மக்களைச் சென்றடைய வழிவகுப்பவை அச்செய்திகள் எழுதப்படும் எளிய, சுவையான நடையே. புளூடார்க்கும் பாபரும் விட்டுச்சென்ற குறிப்புகளை அப்படியே புத்தக வடிவில் தந்தால், எத்தனை இந்தியர்களால் அவற்றைப் புரிந்து, உணர்ந்து, அனுபவித்து, புளகாங்கிதமடைந்து மகிழ முடியும்? தங்களின் 'வந்தார்கள் வென்றார்கள்' மூலமாகவன்றோ அது சாத்தியமாயிற்று? முகலாயர்கள் வரலாறு தந்த அந்த இனிய அனுபவத்தை, அவர்களைவிடக் காலத்தால் மிகவும் முற்பட்ட, எதிரி நாடே ஆயினும் போர்களின் போது கலைச்செல்வங்களுக்குச் சிறிதும் சேதம் விளைவிக்காத, மிகச்சிறந்த கட்டடக்கலையையும் சிற்பக்கலையையும் நமக்குக் கொடையளித்துச் சென்ற சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் வரலாறும் தரவேண்டும் எனத் தமிழர்கள் எதிர்பார்ப்பது தவறா? எழுத்தாளர் சுஜாதா தங்கள் நூலின் முன்னுரையில் கூறியிருப்பதுபோல், கல்விநிலையங்களில் வரலாற்றுப்பாடம் தங்களின் நூல் அளவுக்குச் சுவையாகப் பயிற்றுவிக்கப் பட்டால், அனைத்து மாணாக்கர்களும் நூறு விழுக்காடு பெறுவார்களே! தொழிற்கல்வியில் இடங்கிடைக்க உதவாத பாடம் என்று புறக்கணிக்கப்படாமல், பெரும்பாலான மாணவர்களின் விருப்பப்பாடமாகத் தமிழக வரலாறு மாறுமே! செய்வீர்களா? எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.

நன்றி, வணக்கம்.

52 Comments:

Anonymous Anonymous said...

////வரலாறு இல்லாமல் வரலாற்றுக் கற்பனை நாவல் ஏது? கற்பனை செய்வதற்கும் ஏதாவது ஒரு Reference வேண்டுமே! கற்பனையில் உதித்த வேற்று கிரகவாசி என்றாலும், இரண்டு கை, இரண்டு கால்களுடனும்தானே கற்பனை செய்ய முடிகிறது?/////

மிகவும் அருமையானதொரு உதாரணம்...ஏலியன் மூவிக்களை நினைத்துக்கொண்டு முறுவலித்தேன்.

உண்மையை சொன்னால், ஹாய் மதனுக்கு பகிரங்க கடிதம் என்றவுடன் என்ன பெரியதாக இருக்கப்போகிறது என்றுதான் உள்நுழைந்தேன்...

அப்பா...சரவெடி போங்கள்...ஆதாரங்களுடன் புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள்...வரலாறு குறித்தான உங்கள் ஆழ்ந்த அறிவு வெளிப்படுகிறது இந்த பதிவு மூலம்...

ஹாய் மதன் எந்த சார்பும் அற்றவர் என்று தான் இத்தனை நாள் ரசித்திருந்தேன். என்றாவது ஒரு நாள் பூனை வெளியே வந்துதானே தீரும்...கலைவாணி மாமனார் கதை தெரியுமில்லே...!!!

March 20, 2007 6:50 PM  
Blogger சிவபாலன் said...

நல்ல கட்டுரை (கடிதம்).

மிக ஆழமாக விளக்கியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்

March 20, 2007 7:46 PM  
Blogger சிவபாலன் said...

Kindly remove Word Verification. This will enable more people to post comment. This is just suggestion.

Thanks

Sivabalan

March 20, 2007 7:49 PM  
Anonymous Anonymous said...

மதனுக்கு இதை அனுப்பினீர்களா? இல்லையென்றால் தயவு செய்து அனுப்புங்கள்

நன்றி
குழலி

March 20, 2007 7:58 PM  
Blogger இராம.கி said...

நண்பர்களே,

நீங்கள் செய்கின்ற ஆழமான ஆய்வெல்லாம் அவருக்குப் புரியும் என்றா எண்ணுகிறீர்கள்? தூக்கி வீசியெறிந்து போய்க் கொண்டு இருப்பார்.

தாளிகைக்காரரான அவருக்கு ஆரவாரமாய் ஏதேனும் செய்யவேண்டும்; செய்கிறார். திரு. மதன் வரலாற்றில் பெரிய பணி செய்து விட்டதாய்ப் பலரும் எண்ணிக் கொண்டு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

எனக்கு அப்படி எதிர்பார்க்கத் தோன்றவில்லை.

ஒரு மேம்போக்கு மேதாவியிடம் போய் கற்பூர வாசனை பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். என்னைக் கேட்டால், அவர் பேச்சை ஒதுக்கி உங்கள் பணியைத் தொடருங்கள் என்று சொல்லுவேன்.

கல்லில் நார் உரிக்க முடியாது.

அன்புடன்,
இராம.கி.

March 20, 2007 8:12 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக ஆழமான; ஞாயமான பதில். சொல்லிய பாங்கும் சிறப்பாக உள்ளது.இதை அவருக்கோ அல்லது ஆ.விக்கோ தயவு செய்து அனுப்பவும்.
தொடரவும்.

March 20, 2007 8:25 PM  
Blogger Jeyapalan said...

மதனுக்குத் தெரியாவிட்டால் மற்றவருக்குத் தெரியாதா என்ன?
தெரியவில்ல என்று உண்மையைச் சொல்லாமல், வரலாறே இல்லை என்பது எப்பேர்ப்பட்ட கொழுப்பு?
இந்தக் கட்டுரையை எல்லாப் பத்திரிகைகளுக்கும் அனுப்புங்கள், மக்களறியட்டும் மதனின் பீத்தல்.
உங்கள் விளக்கம் மிகத் தாராளம்.

March 20, 2007 8:26 PM  
Blogger VSK said...

மிகச் சிறந்த திறனாய்வுக் கட்டுரை.

ஆனால், திரு. மதன் சார்பில் எனக்குத் தோன்றியது இதுதான்.

மதன் ஒரு தமிழறிஞர் அல்லர்.

இருக்கின்ற, அவரால் படிக்க முடிந்த ஆதாரங்களைக் கொண்டே அவர் அந்த "வ.வெ." நூலை எழுதினார் என அறிகிறேன்.

கல்வெட்டுகளைத் தோண்டியோ, அல்லது அவற்றை வடிவமைத்தோ இதை எழுதவில்லை அவர்.

எனவே, இருக்கின்ற சரியான மேற்கூறிய ஆதாரங்களை, ஒரு தமிழறிஞர் குழு அனைத்தையும், சரியாக வடிவமைத்து, திருத்தி, நூல் வடிவாகக் கொண்டுவந்தால், மதன் போன்ற தமிழார்வலர்கள், பல திறமையான எழுத்தாளர்கள் இதனைத் திறம்பட கதை அல்லது வரலாறு வடிவில் அனைவர்க்கும் புரியும் வண்ணம் நூலாக்க முடியும் என நினைக்கிறேன்.

ஆதாரங்கள் இல்லாமல் இல்லை.
அதனைத் தேடிச் சென்று, அவற்றைப் புரிந்து கொள்ளும் அறிவு தனக்கில்லை எனவே அவர் சொல்லியிருக்கிறார் எனக் கருதுகிறேன்.

உங்கள் குழுமம் போன்றவர்கள் உடனடியாக ஈடுபட வேண்டிய ஒரு முயற்சி இது.

வரலாறு இல்லாமல் போனவன் இல்லை தமிழன்.

ஆனால், சரியான முறையில் வகைப்படுத்தத் தவறிவிட்டான், என்பதே அவர் வாதம்.

நன்றி.
வளர்க உங்கள் தொண்டு!

March 20, 2007 8:39 PM  
Anonymous Anonymous said...

அருமையான பதிவு. மதன், மற்றும் விகடன் பத்திரிக்கையின் கவனத்திற்கு இந்தப் பதிவு எடுத்துச் செல்லப் பட வேண்டும்.

March 20, 2007 8:45 PM  
Blogger வரலாறு.காம் said...

நன்றி செந்தழல் ரவி!

அது என்ன கலைவாணி மாமனார் கதை? கேள்விப்பட்டதில்லையே!

நன்றி
கமல்
வரலாறு.காம்
www.varalaaru.com

March 20, 2007 9:07 PM  
Blogger வரலாறு.காம் said...

நன்றி சிவபாலன்.

Word verification-ஐ நீக்கிவிட்டோம்.

நன்றி
கமல்
வரலாறு.காம்
www.varalaaru.com

March 20, 2007 9:08 PM  
Blogger வரலாறு.காம் said...

நன்றி குழலி.

ஆனந்தவிகடனுக்கும், அதன் மூலம் மதனுக்கும் அனுப்பியுள்ளோம்.

நன்றி
கமல்
வரலாறு.காம்
www.varalaaru.com

March 20, 2007 9:08 PM  
Blogger வரலாறு.காம் said...

கருத்துக்கு நன்றி இராம.கி ஐயா!

இக்கட்டுரை மதனுக்கு மட்டுமல்ல. இதே கருத்தைக் கொண்டிருக்கும் பிற அறிவுஜீவிகளுக்கும் சேர்த்துத்தான். ஒரே ஒருவராவது உண்மையை உணர்ந்து மனம் மாறினாலும் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.

நன்றி
கமல்
வரலாறு.காம்
www.varalaaru.com

March 20, 2007 9:11 PM  
Blogger VSK said...

மிகச் சிறந்த திறனாய்வுக் கட்டுரை.

ஆனால், திரு. மதன் சார்பில் எனக்குத் தோன்றியது இதுதான்.

மதன் ஒரு தமிழறிஞர் அல்லர்.

இருக்கின்ற, அவரால் படிக்க முடிந்த ஆதாரங்களைக் கொண்டே அவர் அந்த "வ.வெ." நூலை எழுதினார் என அறிகிறேன்.

கல்வெட்டுகளைத் தோண்டியோ, அல்லது அவற்றை வடிவமைத்தோ இதை எழுதவில்லை அவர்.

எனவே, இருக்கின்ற சரியான மேற்கூறிய ஆதாரங்களை, ஒரு தமிழறிஞர் குழு அனைத்தையும், சரியாக வடிவமைத்து, திருத்தி, நூல் வடிவாகக் கொண்டுவந்தால், மதன் போன்ற தமிழார்வலர்கள், பல திறமையான எழுத்தாளர்கள் இதனைத் திறம்பட கதை அல்லது வரலாறு வடிவில் அனைவர்க்கும் புரியும் வண்ணம் நூலாக்க முடியும் என நினைக்கிறேன்.

ஆதாரங்கள் இல்லாமல் இல்லை.
அதனைத் தேடிச் சென்று, அவற்றைப் புரிந்து கொள்ளும் அறிவு தனக்கில்லை எனவே அவர் சொல்லியிருக்கிறார் எனக் கருதுகிறேன்.

உங்கள் குழுமம் போன்றவர்கள் உடனடியாக ஈடுபட வேண்டிய ஒரு முயற்சி இது.

வரலாறு இல்லாமல் போனவன் இல்லை தமிழன்.

ஆனால், சரியான முறையில் வகைப்படுத்தத் தவறிவிட்டான், என்பதே அவர் வாதம்.

இதைச் செய்ய முற்படுவோம். ஏற்கெனவே இருப்பவைகளை மீண்டும் வெளிக்கொணர்வோம்.

இதையெல்லாம் சொன்னால், உடனே தமிழ்த்துரோகி எனும் பட்டம் சூட்டலை விடுத்து.

நோக்கம் ஒன்றாயிருக்கட்டும். உயர்வோம்.

நன்றி.
வளர்க உங்கள் தொண்டு!

March 20, 2007 9:20 PM  
Blogger வரலாறு.காம் said...

பின்னூட்டத்திற்கு நன்றி திரு.எஸ்.கே.

ஆனால் பதிலளித்துள்ள தொனி தாங்கள் கூறியதைப் பிரதிபலிக்கவில்லையே!

உரைநடைக்கு முன்பு கவிதை தோன்றியதால் கற்பனை கலந்த நாவல் எழுதுமளவுக்குத்தான் தகவல்கள் உள்ளன என்று சுயசரிதைக்கும் இலக்கியத்துக்கும் வேறுபாடு தெரியாமல் கூறியிருக்கிறார்.

நன்றி
கமல்
வரலாறு.காம்
www.varalaaru.com

March 20, 2007 9:38 PM  
Anonymous Anonymous said...

////தமிழக வரலாற்றைப் பற்றிப் பாடல்களும் கல்வெட்டுகளும் மட்டுமே மிஞ்சியிருப்பதாக குறைப்பட்டிருக்கிறீர்கள். ஏன்? இந்த இரண்டும் போதாதா? இவற்றில் விடுபட்டவற்றை நிரப்பத்தான் செப்பேடுகளும் சாசனங்களும் இருக்கின்றனவே! அதற்கும் மேலாக, கட்டடக்கலையும் சிற்பக்கலையும் பழங்கால ஓவியங்களும் கண்ணிருப்பவர்களுக்குத் தருமே ஆயிரம் செய்திகளை!////
மிகத்தெளிவான திறனாய்வுக் கட்டுரை.
பயனுள்ள செய்திகள். நன்றி.

March 20, 2007 9:42 PM  
Blogger ஆதிபகவன் said...

சரியான புள்ளி விபரங்களுடன் அருமையான ஒரு கடிதம் (கட்டுரை)

வாழ்த்துக்கள், தொடருங்கள் உங்கள் பணியை.

March 20, 2007 9:42 PM  
Blogger தென்றல் said...

திரு. வெ.இறையன்பு அவர்கள் கேட்டிருந்த கேள்விக்கு மதன் அளித்த பதில் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

உங்களின் மிகத் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி! உங்களின் பணி சிறப்புற வாழ்த்துக்கள்!!

பிகு: மதன் இதற்கு என்ன பதில் அளித்தார் என்பதையும் தெரிவிக்கவும். நன்றி!

March 20, 2007 9:43 PM  
Blogger VSK said...

தவறாகவோ, அவதூறாகவோ ஒரு சொல் கூட என் பின்னூட்டத்தில் இல்லை.

அப்படியிருக்கையில், என் 'தொனியில்' என்ன குற்றம் கண்டீர்கள், திரு. கமல்?

மதன் என்ற ஒருவருக்கு மட்டுமே விடுத்த அறைகூவலாக இதை நான் பார்க்கவில்லை.

தமிழகத்தின் வரலாற்றில் அக்கறையுள்ள ஒவ்வொருவருக்கும் விடுத்த வேண்டுகோளாகவே இதப் பார்த்தேன்.

அப்படியிருக்க, தங்கள் பதிவின் நோக்கம் மாறி, மதன் என்ற ஒரு தனிமனிதரைத் தூற்றும் பதிவாக இது மாறிவிடக்கூடாதே என்பதே என் கருத்து.

செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன.

இதை ஒரு விழிப்புணர்வாக எடுத்துக் கொண்டு புதிய முறையில் உங்களுக்கு ஆக்கம் கொடுக்கும் வண்ணமாகவே நான் எழுதியிருக்கிறேன்.

அது தவறெனில் மன்னிக்கவும்.

முறையான மாற்றுக்கருத்து கூடாது என்பது உங்கள் கொள்கையானால், நான் மேலே சொல்ல விரும்பவில்லை.

March 20, 2007 9:56 PM  
Blogger தருமி said...

hi kamal
hats off to you and to varalaru.com

long time no see ...

March 20, 2007 9:59 PM  
Blogger வரலாறு.காம் said...

திரு. எஸ்.கே,

மன்னிக்கவும். நான் கூறியது மதன் பதிலளித்திருந்த 'தொனி'யை.

இக்கட்டுரையும் மதன் ஒருவருக்கு மட்டுமே எழுதப்பட்டதல்ல.

மாற்றுக்கருத்துக்களை எப்போதும் வரவேற்கிறோம்.

நன்றி
கமல்

March 20, 2007 10:00 PM  
Blogger வரலாறு.காம் said...

தருமி சார்,

வாழ்த்துக்கு நன்றி.

வேலைப்பளுவினால் முன்புபோல் இணையப்பக்கம் அடிக்கடி வரமுடிவதில்லை. கூடிய விரைவில் நிலைமை சரியாகும்.

நன்றி
கமல்

March 20, 2007 10:07 PM  
Blogger வரலாறு.காம் said...

ஆதிபகவன், தென்றல்,

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

பதில் கிடைத்ததும் தெரியப்படுத்துகிறோம்.

நன்றி
கமல்

March 20, 2007 10:19 PM  
Blogger Kasi Arumugam said...

மதனின் பதிலை ஆனந்த விகடனில் வாசித்தபோது ஏமாற்றத்துடன் எரிச்சலாயிருந்தது. உங்கள் கடிதம் நல்லமுறையில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இதனாலெல்லாம் இந்த நிலை மாறிவிடும் என்று நம்பவில்லை. உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

March 20, 2007 10:27 PM  
Anonymous Anonymous said...

Very well done varalaaru.com team.

I don't any point in sending this to madan or ananda vikatan. Send it to irai anbu instead.

March 20, 2007 10:53 PM  
Blogger ஓகை said...

மிக மிக அருமையான ஒரு பதிவு. பாராட்டுகள் கமல். மதனின் பதிலைப் படித்தவுடன் அதர்ச்சி அடைந்தேன். வ.வெ. எழுதியதற்கு கிடைத்த அளவிற்கு இப்பொருளில் எழுத ஆதாரங்கள் இல்லை என்ற அளவில் மதன் நிறுத்தியிருந்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் அவர் சொல்லிய மற்ற கருத்துகள் தீவிர மறுப்புக்கு உட்படவேண்டியவை.

March 20, 2007 11:27 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

மிக அருமையான எடுத்துகாட்டுகளுடன்
சொன்ன பதில் அருமை. இது விகடனில் வந்தால் மிக நலம்.

வரலாறு தளம் மேலும் மேலும் வளர என் வாழ்த்துகள்.

மயிலாடுதுறை சிவா...

March 21, 2007 12:15 AM  
Blogger Jay said...

அட்ரா... அட்ரா.. அட்ரா...
தமிழன் வரலாற்றை தமிழனே கேள்விக் குறியாக்குவதா??? சிறப்பான பதில் அன்பரே!

March 21, 2007 12:20 AM  
Anonymous Anonymous said...

Just wanted to add my experience. Some years back I was in a Tamizh poetry egroups where they send a Tamizh poem everyday.
One day there was an article by one renouned author. Infact, he writes about "Kashmir" and "Middle east" in popular Tamizh magazines. His words while describing Chola kings were "Rajaraja chola was ruling Tanjore. In today's equivalence he would have ruled Tajnore district. He has no power more than Tanjore collector."
The sad thing here is that person can read in detail about some other part of world's history in detail and when comes to Tamizh history this is his stand. Even after writing to the moderator nobody is ready to write regrets. Citin this I quit that group.
Not just him, most renouned people behave the same. This is unfortunate fate of us. And one more thing. Whenever I get Great India email where the first line usually is "India hasnot invaded any country in 2000 years" I used to reply them like don't they approve cholas as indian kings or they are unaware of it.
Murali.

March 21, 2007 2:45 AM  
Blogger வரலாறு.காம் said...

பின்னூட்டங்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி காசி ஆறுமுகம், பிரகாஷ், ஓகை, மயிலாடுதுறை சிவா, மயூரேசன் மற்றும் முரளி.

மதன் மட்டுமல்ல. இதுபோல் எண்ணம் கொண்டிருக்கும் பிற அறிஞர்களும் உண்மையை உணர்ந்தால் போதும்.

விகடனுக்கும் மதனுக்கும் அனுப்பியுள்ளோம். இறையன்புவுக்கும் அனுப்பப் போகிறோம்.

ஆனால், விகடன் பிரசுரிக்குமா என்பது சந்தேகம்தான். ஏற்கனவே இராஜராஜசோழன் சமாதி பற்றிய மறுப்புக் கடிதங்களை வெளியிட மறுத்து விட்டார்கள். அதனால்தான் வேண்டாத வதந்திகள் என்ற தலைப்பில் வரலாறு.காமில் அக்கட்டுரையை வெளியிட்டோம். பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி
கமல்
www.varalaaru.com

March 21, 2007 6:31 AM  
Blogger G.Ragavan said...

மதனுக்குத் தெரிஞ்சதத்தான எழுத முடியும்? திடீர்னு இலக்கியம்..கல்வெட்டுன்னா எங்க போவாரு? நல்ல நடையோட வ.வெ எழுதுனாரு. ஒத்துக்க வேண்டியதுதான். ஆனால் தமிழர் வரலாறு பற்றிய செய்திகள் இல்லைன்னு சொல்றது அவரது அறியாமை. வெளிநாட்டு வின்செண்ட் ஸ்மித் Early Histories of South Indiaனு எழுத முடியுது. இவருக்கு முடியலைன்னா...தெரியாதுன்னு சொல்லலாம். அதை விட்டுட்டு திரிச்சுச் சொல்றது ரொம்பத் தப்பு. சிலப்பதிகாரமெல்லாம் ரொம்பக் கரைச்சுக் குடிச்சிருக்காரு போல. ம்ம்ம்...

March 21, 2007 12:26 PM  
Blogger பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

வணக்கம்,

ஒரு அருமையான, ஆதாரங்களுடன் கூடிய பதிவு... தொடரட்டும் உங்கள் பணி...

நன்றி

March 21, 2007 12:44 PM  
Blogger கார்த்திக் பிரபு said...

நல்ல பதிவு ..நான் கூட நிறைய தடவை விகடனுக்கும் ,மதனுக்கும் படைப்புகள் ,கேள்விகள் அனுப்பியுள்ளேன் ..பதில் இல்லை

March 21, 2007 12:48 PM  
Anonymous Anonymous said...

மதன் ஒரு பாப்பானாமே?

March 21, 2007 1:25 PM  
Blogger thiru said...

தமிழகத்தில் பண்டைய வரலாற்றிற்கா பஞ்சம்? பண்டைய வரலாறு சிதைக்கப்படாமலும், திருத்தப்படாமலும் பார்த்து உண்மையை இக்கால வழிமுறைகளில் பதிவு செய்வது அவசியம்.

வரலாறு பற்றிய உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்!

March 21, 2007 2:35 PM  
Blogger -L-L-D-a-s-u said...

நல்ல பதிவு ... உங்கள் தொண்டு வளர்க.

மதனுக்குள்ள ஈகோ , தெரியாத விஷ்யத்தைக்கூட ஒத்துக்கொள்ள மறுக்கிறது .

March 21, 2007 6:50 PM  
Anonymous Anonymous said...

தலை நிமிர வைக்கும் அருமையான பதில்.

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவற்றை படித்தபின் தமிழக உண்மை வரலாற்றை அறிய மிகவும் ஆவல் கொண்டு புத்தகங்களை தேடி அலைந்திருக்கின்றேன்.

தங்களின் அரிய பணி தொடரட்டும்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்
இறை நேசன்

March 22, 2007 2:09 PM  
Blogger வரலாறு.காம் said...

நன்றி ஜி.ராகவன், pari.arasu, கார்த்திக் பிரபு.

தெரியாதுன்னு சொல்லியிருந்தால் இக்கடிதத்துக்குத் தேவையே இல்லை.

நன்றி
கமல்

March 22, 2007 6:46 PM  
Blogger வரலாறு.காம் said...

நன்றி திரு, L-L-Dasu மற்றும் இறைநேசன்.

நாங்களும் பொ.செவினால் ஈர்க்கப்பட்டுத்தான் உண்மை வரலாற்றை அறியும் பயணத்தில் இருக்கிறோம்.

நன்றி
கமல்

March 22, 2007 6:46 PM  
Blogger அமர பாரதி said...

மதனுக்கு தமிழன் வரலாற்றில் இருக்கும் தெரிவை விட தமிழன் மேல் இருக்கும் வெறுப்பு அதிகமாக இருக்குமோ?

March 22, 2007 7:20 PM  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

மிக அருமையான கட்டுரை சார். இதனை ஆனந்தவிகடனுக்கு அனுப்பினீர்களா? அவர்கள் வெளியிடுபவர்கள் அல்ல என்றாலும். மதன் போன்ற அரைகுறை அறிவுசீவிகள் இப்படிப்பட்ட மடத்தனங்களை பொதுஜன ஊடகங்களில் உதிர்க்கும் போது ஆத்திரம் ஏற்படுகிறது. தங்கள் பதில் அந்த ஆத்திரத்தை தணிப்பதுடன் உளறல்களை கூட ஒரு உத்வேகமாக எடுத்துக்கொண்டு இப்படி நல்ல விசயங்களை அளிக்க முடியும் என்பதை காட்டுகிறது. தாங்கள் அடுத்த முக்கிய விசயத்தையும் செய்ய வேண்டும். மதனைவிட சிறந்த முறையில் சோழர் வரலாற்றை சுவைபட அழகிய சித்திரங்கள் புகைப்படங்களுடன் சாதாரண மனிதன் முதல் வரலாற்றாசிரியர் முதல் மூக்கில் விரல் வைத்து வியக்கமளவில் கொண்டு வரவேண்டும். முதலில் தமிழில் பின்னர் ஹிந்தி, ஆங்கிலத்தில். உலகமே வியக்க வேண்டும். அப்படியே முடிந்தால் ஒரு ஆவணப்படத்தையும் உருவாக்குங்கள். ஹிஸ்டரி சானலை பாருங்கள் 400 ஆண்டு மேற்கத்திய வரலாற்றை அந்த மாதிரி காட்டுகிறார்கள். நமக்கு பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம். அதனை நாம் காட்டுகிற முறையில் காட்டுகிறோமில்லை. மக்கள் தொலைக்காட்சி (அந்த கட்சியை நான் கடுமையாக எதிர்த்தாலும்) தமிழருக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நிச்சயமாக அதில் காட்டுவார்கள்.

March 23, 2007 8:37 AM  
Blogger Balaji Chitra Ganesan said...

ஒரு பத்திரிக்கையாளரை நீங்கள் ஏன் கல்வெட்டுகளை ஆராய்ந்து தமிழ் வரலாறு எழுதவில்லை என்று கேட்பது விதண்டாவாதமாகவே படுகிறது. நான் படித்திருக்கும் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் (தாபர், கீய், நைப்பால், கல்கி போன்றோர்) இந்திய வரலாறு எழுதும் போது ஆதரங்கள் கிடைப்பது அரிதாக இருப்பதை கட்டாயம் குறிப்பிட்டுள்ளனர். அதைத்தான் மதன் அவர்கள் தனக்கே உரிய பாணியில் வெடுக்கென குறிப்பிட்டுள்ளார்.

குறள், தொல்காப்பியம். அகனாநூறு பற்றியெல்லாம் நீங்கள் சொல்லி அவருக்குத் தெரியவேண்டியிருக்காது.
பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழனும் தமிழனும் அடித்துக்கொண்டு செத்ததை மதன் வரலாறாக எழுதாவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப்போய்விடாது.

பொன்னியின் செல்வனில் 'தமிழ் அரசர்கள் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டியவர்கள். அவர்கள் மிகச்சிறிதான நாடுகளை வைத்துக்கொண்டு வாய்கிழியப் பேசியுள்ளனர்' என்ற ரீதியில் அருள்மொழி கூறுவதாக கல்கி எழுதியிருப்பார். அதற்கும் மதன் கூறியதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

மற்றபடி அவர் மேம்போக்காக வெளியிட்ட கருத்தை வைத்துக்கொண்டு அவரை சண்டைக்கு இழுப்பதால் உங்களுக்கு திருப்தி ஏற்பட்டால் எனக்கு ஒரு ஆட்சேபனையுமில்லை.

March 28, 2007 6:08 AM  
Blogger ஜடாயு said...

// எந்த விதத்திலும் குறைவில்லாமல் நீலகண்ட சாஸ்திரியாரும் சதாசிவ பண்டாரத்தாரும் இன்னும் பிற அறிஞர்களும் தொகுத்து வைத்திருக்கும் சோழர் வரலாறு தாங்கள் அறியாததா? அவர்களையெல்லாம் அவமானப் படுத்துவது போலல்லவா அமைந்திருக்கிறது தங்கள் பதில்!! //

மதனிடம் கேட்கப்பட்டது பொது தமிழக வரலாறு பற்றி அல்ல, குறிப்பாக சோழர் பற்றியது. அதற்கு அவர் அளித்தது அபத்தமான பதில். நீங்கள் கேட்டது சரியான கேள்வி. அதுவும் தஞ்சை மண்ணில் பிறந்தததாகக் கூறிக் கொள்ளும் ஒருவர் தன் மண்ணின் வரலாறு, கலாசாரம் மீது கொள்ளும் மதிப்பீடு இவ்வளவு தானா?

முகலாய வரலாற்றை விடத் தொன்மையானது, ஆராய்ச்சிக்கு கொஞ்சம் கடினமாது சோழர் வரலாறு. அந்த சவாலை ஏற்றுக் கொள்ளும் வலிமை, உழைப்புக்கான நேரம், முயற்சி இல்லாமையால் இப்படி மதன் சொல்லி விட்டார் என்று நினைக்கிறேன்.

இராம.கி said:
// தாளிகைக்காரரான அவருக்கு ஆரவாரமாய் ஏதேனும் செய்யவேண்டும்; செய்கிறார். திரு. மதன் வரலாற்றில் பெரிய பணி செய்து விட்டதாய்ப் பலரும் எண்ணிக் கொண்டு எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மேம்போக்கு மேதாவியிடம் போய் கற்பூர வாசனை பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். //

(தனித்தமிழ் போன்ற போலி மொழி மாயைகளில் சிக்காமல்)
நல்ல தமிழில் பல அறிவியல், பொது அறிவு விஷயங்களை வெகுஜன அளவில் நன்றாக எழுதி வருபவர் மதன். திரைப்படம் பற்றிய அவரது ரசனைப் பார்வைகள் சிறப்பானவை, தமிழ்ச் சூழலுக்குத் தேவையானவை. இன்றைக்கு தமிழின் முன்னணி கேலிச் சித்திரக் காரர் அவர் தான். கார்ட்டூன் மொழி கடந்தது என்றாலும், தமிழ் வாசகங்களுடன் வரும் நல்ல கார்டூன்கள் மொழிக்கு வளம் சேர்ப்பவை தானே?

இராம.கி மதன் பற்றிக் கூறியது சரியல்ல.

உங்கள் பணி சிறக்கட்டும்.

March 28, 2007 5:20 PM  
Blogger வரலாறு.காம் said...

கருத்துக்களுக்கு நன்றி திரு.அமரபாரதி மற்றும் அரவிந்தன் நீலகண்டன்.

எளிய சுவையான தமிழில் தமிழக வரலாற்றை எழுதவேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். அதை நோக்கிய பயணத்தின் ஒரு மைல்கல்தான் வரலாறு.காம்.

நன்றி
கமல்

April 07, 2007 5:19 PM  
Blogger வரலாறு.காம் said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி பாலாஜி.

ஒரு பத்திரிக்கையாளர் பத்திரிக்கையாளராக மட்டும் இருந்திருந்தால் இக்கேள்வியை அவரிடம் கேட்டிருக்கவேண்டிய தேவையே இருந்திருக்காது. வ.வெ மூலம் சொல்லவந்ததை எளிதாகச் சொல்லக்கூடிய சரித்திர ஆசிரியர் என்ற பெயர் பெற்ற பிறகு தமிழனுக்கு ஏற்படும் சாதாரணக் கேள்விதான் அவரிடம் கேட்கப்பட்டது.

வரலாறு என்றால் போர் மட்டும்தானா?

தமிழனும் தமிழனும் அடித்துக்கொண்டு செத்ததுதான் தமிழக வரலாறு என்றால், ஒரு இந்தியனும் இந்தியனும் அடித்துக் கொண்டு செத்தது இந்திய வரலாறு என்றும், ஒரு ஐரோப்பியனும் ஐரோப்பியனும் அடித்துக் கொண்டு செத்ததுதான் ஐரோப்பிய வரலாறு என்றும்தானே சொல்லவேண்டும்?

'தமிழ் அரசர்கள் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவர்கள்' என்று கூறியது, வெளியுலக அறிவு அவ்வளவாக இல்லாத, வளர்ந்து வரும் அருள்மொழி கூறியது. அதையே கல்கியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது.

மதனுடன் விதண்டாவாதம் செய்து சண்டைக்கு இழுக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணமல்ல. அதைவிட வேறு முக்கியமான வேலைகள் உள்ளன. எதற்காக இக்கடிதம் எழுதப்பட்டது என்பதைக் கடிதத்திலேயே குறிப்பிட்டிருக்கிறோம்.

நன்றி
கமல்

April 07, 2007 5:28 PM  
Blogger வரலாறு.காம் said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஜடாயு. குறைந்த பட்சம் 'தன்னால் முடியாது' என்று கூறியிருந்தாலாவது ஏற்றுக்கொள்ளலாம்.

நன்றி
கமல்

April 07, 2007 5:30 PM  
Blogger Manuneedhi - தமிழன் said...

தமிழனாகப் பிறந்த ஒவ்வொருனும், ஏன் தமிழ்ப்பேசத்தெரிந்த அனைவருமே தெரிந்துகொள்ளவேண்டிய பொக்கிஷம் நீங்கள் கொடுத்த விளக்கம். மதம் இருக்கத்தான் செய்யும் மதனிடம். பேனாவைக்கையில் எடுத்தால் என்னவேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக்கும் இவரைப்போன்ற வளர்ந்துவிட்ட எழுத்தாளர்களுக்கு ஒரு நல்ல சாட்டையடி! வாழ்த்துக்கள்!

சென்னை-நவின்,
கலிபோர்னியா (அமெரிக்கா)

June 05, 2007 2:14 AM  
Anonymous Anonymous said...

what to say?... we have our own history...its a fact n truth, no need to be recognised by anybody else... even if it is arulmozhivarman, jst ignore him.. be n feel proud for being an indian especially a worthless THAMIZHAN. thirukkural' alone can speak much more.. who is madan?...to recognise us..ananda vikatan-is a commercial weekly nothing else more than that...

thanks...pls continue feeding abt our history(mannikkanum, thamizh typing tech theriyaathu...)

-manickam-

July 29, 2007 9:49 PM  
Blogger TBCD said...

//*அது என்ன கலைவாணி மாமனார் கதை? கேள்விப்பட்டதில்லையே!*//


அந்த கதாப்பாத்திரத்தின் பெயரை மாற்றிச் சொல்லிவிட்டர்
சுஜாதா என்ற மாபேதை சீ சீ மாமேதை ஒரு கதை எழுதினார்..அதில் ஏகப்பட்ட அரசியல் தூவினார்...அந்த வழி வந்த மதனும் அவ்வாறே செய்வார் என்று நம்பப்படுகிறது...
இந்த பதிவிலே அந்த கதைக்கு சுட்டியும், அதை கிழித்து கட்டிய தோரணமும் இருக்கிறது..


http://poar-parai.blogspot.com/2007/01/blog-post_16.html

தங்கள் பதில் அருமை...விளக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்..
.ஆனால் அவர்களுக்கு காது செவிடு...
அள்ள குறையாத வரலாறு உடைய தமிழனை இவ்வாறு சொல்ல கடைந்தெடுத்த அயோக்கியர்களால் மட்டுமே முடியும். பல புத்தகங்களை புரட்டி, புரட்டி எழுதுவதல்ல வரலாறு...அவர் எழுதியது ஒரு திரைக்கதை அதுக்கு ஒரு மூலம் இருந்தது...
தமிழர்கள் இந்த புத்தகத்தை புறகணிக்க வேண்டும்...அப்போது தான் அவர்களூக்கு புத்தி வரும்..

August 24, 2007 2:25 PM  
Blogger அகண்ட தமிழகம் said...

அன்பான தமிழ் மக்களுக்கு ஆஸ்றேலியாவிலிருந்து(டவுன்ஸ்வில்-குயிந்ஸ்லாந்து) எழுதும் மடல். மருந்தாக்கியலில் முனைவர் பட்டப்படிப்பிற்காக இங்கு வந்த எனக்கு முதலில் வியப்பேற்ப்படுத்தியவை இங்கு காணக்கிடைக்கும் பெயர்கள்தான். இங்கு வாழும் நம்மைப்போன்ற தோற்றமுடைய பழங்குடியினர் (அபாரிஜின்) ஏற்படுத்திய வெகு சில பெயர்களை மட்டும் கீழே தருகிறேன். மண்டிங்புறா, துரிங்கோவா, ஊணூண்பா. நம்மூர்ப்பெயர்களைப்போலத்தோன்றவில்லை?
மேலும் இந்தப்பழங்குடியினர் நம்மைக் கண்டால் மிக மகிழ்ந்து தானாக பேச்சு கொடுக்கத்தொடங்குகின்றனர். ஓரு முறை அவர்களிள் ஒருவர் என்னைப்பார்த்து, 'same blood' எனச்சொன்னது இன்னமும் என் காதுகளில் கேட்டுக்கொண்டேிருக்கிறது. இவையெல்லாம் நம் தமிழர் தொடர்பை பறைசாற்றுவதாகவே இங்குள்ள தமிழர்கள் (ஈழத்தமிழர்கள் அதிகம்) உவகை கொள்ளுகிறோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தமிழகமும் ஆஸ்றேலியாவும் ஒன்றாயிருந்தது வெறும் கற்பனையில்லை. புவியியல் உண்மை. எனவே தமிழர் தொடர்பினை மொழியாராய்ச்சியின் மூலம் நிரூபிக்கமுடியும் என நம்புவதில் அர்த்தம் உள்ளது.
ஆனால் தமிழகத்தில் நடப்பவை எதுவும் நம்பிக்கை அளிப்பதாயில்லை. மதன் பதில்களைத்தான் கூறுகிறேன். வரலாறு.காமுக்கு என் மனமார்ந்த நன்றி. அற்புதமான கடிதம் அது. புண்பட்ட என் மனம் ஓரளவு சாந்தமடைந்தது.

September 12, 2007 11:11 AM  
Blogger தமிழ்மகன் said...

மிக அருமையான கட்டுரை. விகடனுக்கு அனுப்பி வைத்தால் நிச்சயம் இக் கட்டுரையை பிரசுரிப்பர். அல்லது தகுந்த பதில் அளிக்கவாவது கடமைப்படுவர். அன்பு கூர்ந்து அனுப்பி வைக்கவும்.

October 30, 2007 7:23 PM  
Blogger உதயதேவன் said...

1.முகலாய வரலாற்றை விடத் தொன்மையானது, ஆராய்ச்சிக்கு கொஞ்சம் கடினமாது சோழர் வரலாறு. அந்த சவாலை ஏற்றுக் கொள்ளும் வலிமை, உழைப்புக்கான நேரம், முயற்சி இல்லாமையால் இப்படி மதன் சொல்லி விட்டார் என்று நினைக்கிறேன்.

2.தமிழகத்தில் தமிழும் இல்லை... தமிழனும் இல்லை.... புலம் பெயர்ந்தவர் மற்றும் அயல் நாட்டில் வசிப்பவர்களிடம் தான் ஓரளவு அவ்வெண்ணம் உள்ளது என்பது திண்ணம்.. இங்கே சிற்சிறு குழுக்களாக சாதி, மதம் அதன் உட்பிரிவுகள், அரசியல், சினிமா,கலாச்சார சீர்கேடுகளாளும்.. பிரிந்து.. அந்த நோக்கோடு... வாழ்பவர்களே அதிகம்..எனவே இத்தகைய சூழல் மாறாமல்...வருதப்படுவதை தவிர வேறு என்ன செய்ய?

October 31, 2007 12:25 PM  

Post a Comment

<< Home