வாசகர்களுக்கு வணக்கம்,
சென்ற மாத மகேந்திரர் சிறப்பிதழைப் படித்து, தங்கள் கருத்துகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்ட வாசகர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துச் செய்திகள்
இங்கே வெளியிடப்பட்டுள்ளன.
கோயில்கள் நம் தலைப்பெழுத்தைத் தாங்கி நிற்கும் கருவூலங்கள். அக்கோயில்களோடு அன்றாடம் தொடர்பு கொண்டு, அத்தலைப்பெழுத்துக்களைத் தவிக்க விடாமல் காக்க வைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் குருக்கள்தான். கடந்த மே மாதம், இப்போதைய தமிழக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், கோயில் குருக்கள் வேலைக்குப் பிறப்பால் இந்துவாக இருப்பதே அவசியம். ஒரு குறிப்பிட்ட சாதியையோ அல்லது சமூகத்தையோ சேர்ந்தவருக்கு மட்டுமே ஏக போக உரிமை என்னும் நிலை மாறி, அனைத்துச் சமூகத்தைச் சார்ந்தவருக்கும் அவ்வுரிமை உண்டு என்று உத்தரவு பிறப்பித்தது.
1972-இல் இதைப் போன்ற ஒரு ஆணை பிறந்த போது, சுப்ரீம் கோர்ட்டின் 'stay order' இதை அமுலுக்கு வரவிடாமல் தடுத்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இச்சட்டம் மீண்டும் உயிரூட்டப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஏற்றத்தாழ்வுகளை அறவே ஒழித்தல் சாத்தியமன்றெனினும், இறைவனுக்கு முன்னாவது அத்தகைய பாகுபாடுகள் இல்லாமல் இருப்பது அவசியம்.
'அர்ச்சகராக விழைவோருக்குத் தேவையான தகுதி வரையறுக்கப்பட்டுத் தகுந்த பயிற்சியும் அளிக்கப்படும்', என்று தமிழக அரசின் அறிக்கை தெரிவித்தாலும், அத்தகுதிகள் யாவை, அர்ச்சகருக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் என்ன என்பதைப் பற்றி அறியக் கூடவில்லை. இந்நிலையில், சில கருத்துக்களை இங்கு முன் வைக்கிறோம்.
தமிழ் மற்றும் சரித்திரப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் கூறியது போல, "குருக்கள் குறைந்தபட்சம் பத்தாம் வகுப்புத் தேறியவர்களாக இருத்தல் வேண்டும். அப்படித் தேறியவர்களுக்குப் பல்கலைக்கழகங்களின் சார்பில் சரித்திரம், சமயம், கலைகள் முதலானவற்றில் பயிற்சியளித்துப் பட்டயமும் வழங்கப்பட வேண்டும்."
ஒரு கோயிலைத் தரிசிக்கச் செல்லும் பொழுது, பெரும்பாலும் அவ்வூர்க் குருக்கள் சொல்வதையே உண்மை என நம்ப வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், அங்கு இருக்கும் அர்ச்சகர்கள் உண்மையை உணர்ந்திருத்தல் அவசியமாகிறது. இல்லையேல், பல புரளிகள் பரவி, அப்புறம் எத்தனைதான் முயன்றாலும் நிழலைத் துடைத்து நிஜத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதென்பது கடின்மாகிறது.
குறைந்தபட்சம் ஆறு மாத காலமாவது அர்ச்சகர்களுக்குப் பயிற்சியளித்தல் அவசியம். அப்பயிற்சியின் பொழுது, அவர்கள் இருக்கப் போகும் மண்டலத்தில் இருக்கும் சிறப்பு வாய்ந்த கோயில்கள், அதைக் கட்டியவர்கள், அக்கோயில்களில் கிடைக்கும் அரிய கல்வெட்டுகள் பற்றிய தகவல்களை அவர்கள் பெற வேண்டும். மேலும் அக்கோயில்களைப் பற்றித் திருமுறையாளர்கள், ஆழ்வார்கள் முதலானோர் பாடிய பாடல்களையும் இவர்களுக்குப் போதித்தல் அவசியம். சிவன் கோயில்களில் தேவாரமும், வைணவ ஆலயங்களில் பிரபந்தமும் நாள் தோறும் ஓத வழி வகுத்து, தமிழ் மணம் பரப்பும் மலர்களாய் இவ்வர்ச்சகர்கள் உருவாக வகை செய்தல் அவசியம்.
கோயில்கள் கலையின் இருப்பிடங்கள். இக்கலைக் களஞ்சியத்தைக் காக்கும் பொறுப்பு பெரும்பாலும் அர்ச்சகர்களையே சார்ந்து இருக்கிறது. இவ்வர்ச்சகர்களுக்கும் இக் கலையுணர்வு இருக்குமாயின், பல கோயில் திருமேனிகளின் மேல் குளவிக் கூடுகளும், கரப்பான் பூச்சியின் வீடுகளும் அமையாமல் தடுக்க முடியும். சுகாதாரத்தின் அவசியம் உணர்ந்தவர்களாய் இவ்வர்ச்சகர்கள் வளர்ந்து, திருமஞ்சனம் மற்றும் பல சடங்குகளின் பொழுது, எதை எல்லாம் உபயோகிக்கலாம், எதனை உபயோகித்தால் சிற்பங்கள் பாழாகும் என்பதை உணர்ந்தவராய் இருத்தல் அவசியம். பல சமயங்களில், எது அழகு என்றே உணராதவராய் நல்ல சிற்பத்தின் மேல் 'oil paint' வண்ணத்தை அழகென நினைப்பவராய்க் கோயில் திருப்பணியாளர்கள் அமைந்து விடுகிறார்கள். உண்மையான கலையுணர்வும், இரசனையும் ஏற்படின், பல நூற்றாண்டுகளாய் நிற்கும் சிற்பங்கள் இன்னும் பல நூற்றாண்டுகள் நிற்க வழி பிறக்கும்.
அன்புடன்,
ஆசிரியர் குழு.