வாசகர்களுக்கு வணக்கம்.
மாதங்களில் சிறந்த மார்கழி என்றதும் மனதில் தோன்றும் எண்ணங்களுள் ஒன்று 'இசை விழா'வைப் பற்றியதாக நிச்சயம் இருக்கும். உலகின் எந்த இடத்திலும் காண முடியாத படி, சென்னையில் ஐந்து கி.மீ பரப்பளவுக்குள், ஒரே நாளில் கிட்டத்தட்ட நூறு இடங்களில் இனிய இசை ஒலிப்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். வருடா வருடம் ஒலிக்கும் இசையைப் போலவே, வருடம் தவறாமல் டிசம்பர் மாதங்களில் நம் காதுகளில், தமிழிசையின் துயர் நிலையைப் பற்றிய செய்திகளும், தமிழ்ப் பாடல்கள் கச்சேரிகளில் அதிகம் ஒலிக்க வேண்டி கோரிக்கைகளும், ஒலிக்கத் தவறுவதே இல்லை.
இந்த வருடமும் ஆனந்த விகடன், குங்குமம் போன்ற பத்திரிக்கைகளின் தலையங்கங்கள் தமிழ் இசை வளர்ச்சியின் தேவையை வலியுறுத்தின. இவற்றைப் படிக்கும் போது, தமிழ்ப் பாடல்களின் வளர்ச்சி வெறும் இசைக் கலைஞர்களின் கையில் மட்டுமே இருப்பது போலவும், இசை ரசிகர்களுக்கோ, பத்திரிக்கைத்துறைக்கோ எந்தவிதப் பங்கும் இருக்க முடியாது என்பது போலவும் தோன்றுகிறது.
முதலில், உண்மை என்ன? தமிழ்ப் பாடல்களின் நிலை என்ன? அவை பாடப்படுவதில்லையா? இந்த மார்கழியில் கிட்டத்தட்ட முப்பது கச்சேரிகள் கேட்ட நிலையில், தமிழ்ப் பாடல்கள் கணிசமான அளவு பாடப்படுகின்றன என்றே தோன்றுகிறது. இன்றைய நிலையில், முதன்மைப் பாடகர் என்று கருதக் கூடிய நிலையில் உள்ள சஞ்சய் சுப்ரமணியம், ஒரு பேட்டியில், "நான் என் கச்சேரிகளில் தமிழ்ப்பாடல் பாடாமல் இருக்கவே மாட்டேன்", என்று கூறியுள்ளார். கூறியதோடு நில்லாமல், திருவருட்பா பாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர் நிகழ்த்திய கச்சேரியை, உலகத் தமிழர்கள் அனைவரும் தொலைக்காட்சியில் கண்டு களித்திருப்பார்கள். அக்கச்சேரியைத் தவிர, அவரின் வேறு இரண்டு கச்சேரிகளை இந்த மார்கழியில் கேட்டோம். அவற்றுள் ஒன்றை 'தமிழிசைக் கச்சேரியாகவும்', மற்றொன்றில் கணிசமான அளவு தமிழ்ப் பாடல்களுடனும் பாடினார். இந்த ஆண்டும் தமிழிசைச் சங்கத்தில், முதன்மை ஸ்தானத்தில் இருக்கும் அனைத்துப் பாடகர்களும் தமிழ்ப் பாடல்களைக் கொண்டு கச்சேரிகள் செய்தனர். தமிழிசைச் சங்கத்தைத் தவிர, கார்த்திக் ·பைன் ஆர்ட்ஸிலும், தமிழிசை விழா நடந்தது. அவ்விழாவிலும், பிரபல பாடகர்கள் பலர் தமிழ்ப் பாடல்களை மட்டும் பாடி நிறைவான கச்சேரிகள் செய்தனர்.
இவற்றை நோக்கும் போது,
1. தமிழில் நல்ல பாடல்கள் உள்ளன!
2. தமிழ்ப் பாடல்கள் ஏனோ தானோ என்று துக்கடாவாகப் பாடும் நிலையில் நலிந்து காணப்படுவதில்லை!
3. நிறைவான கச்சேரிகள் பல செய்யக் கூடிய நிலையில் நிறைய பாடல்கள் உள்ளன!
4. அவை பாடகர்களிடையே புழக்கத்திலும் உள்ளன!
என்பவை தெளிவாகின்றன. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் முழுநேரத் தமிழ்க் கச்சேரி செய்ய முதன்மைப் பாடகர்கள் அனைவரும் தயாராக இருக்கும் பட்சத்தில், தமிழிசையை வளர்க்கும் பணியை யார் செய்வதில்லை? பாடகர்களா? அல்லது தமிழ்ப் பாடல்கள் ஒலிக்க நிறைய மேடைகள் ஏற்படுத்திக் கொடுக்காதவர்களா?
தமிழிசைக் கச்சேரிகளை நடத்திய இடங்களை மேலே குறிப்பிட்டோம். அவை தவிர, எந்த மொழியில் பாடினாலும் ஏற்கக் கூடிய சபைகள் பலவிலும் தமிழ்ப் பாடல்கள் பல ஒலித்ததைக் கேட்டவர்கள் அறிவார்கள். 'ஆசாரம் என்ற பெயரில் பல கட்டுப்பெட்டித்தனங்களைச் சுமக்கும் இடம்' என்று பலரால் வர்ணிக்கப்படும் இடமான ம்யூசிக் அகாடமியில், நான் கேட்ட கச்சேரிகளில் பல தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. சிக்கல் குருசரண் என்ற இளைஞர் தனது கச்சேரியை, ஓர் அரிய (தமிழ்) வர்ணத்தில் தொடங்கினார். வளர்ந்து வரும் கலைஞரான ஸ்வர்ண ரேதஸ், தனது கச்சேரியின் முதல் பிரதான உருப்படியை 'சற்றே விலகி இரும் பிள்ளாய்' என்று தமிழில் பாடினார். அதற்காக, அவர்களுக்குத் தனியாக ஏதேனும் பாராட்டு கிடைத்ததா? குறைந்த பட்சம், பத்திரிகை விமர்சனங்களாவது, இவ்விஷயங்களைக் குறிப்பிட்டு, உற்சாகப்படுத்தினவா? உண்மையில், அந்த அகாடமி கூட்டத்தில், சீன மொழியில் பாடினாலும், தமிழில் பாடினாலும் பெரிய வித்தியாசம் ஒன்றும் ஏற்படாது என்றே தோன்றுகிறது.
மொழியையும் தாண்டி இசையை ரசிக்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது. அக்கூட்டமே இன்று சபைகளை நிரப்புகிறது. அவர்களுக்கு 'கத்தன வாரிகி' பாடினாலும் ஒன்றுதான், 'காண வேண்டாமோ! இரு கண் இருக்கும் போதே விண்ணுயர் கோபுரம்' என்று தமிழ்த் தேனில் குளிப்பாட்டினாலும் ஒன்றுதான். அந்தக் கூட்டமே ம்யூசிக் அகாடமி கச்சேரிகளுக்கும் வருகிறது, தமிழிசைக் கச்சேரிகளுக்கும் வருகிறது. வருடா வருடம் நம் காதுகளில் விழும் புலம்பல்கள் உண்மையெனில், ம்யூசிக் அகாடமி கூட்டத்தை விட, அண்ணா நகரில் நடைபெறும் தமிழிசைக் கச்சேரிகளுக்கு, கணிசமான அளவில் கூட்டம் கூட வேண்டாமோ? அல்லது, தமிழில் பாட வேண்டி தலையங்கங்கள் எழுதும் பத்திரிக்கைகள்தான், தமிழில் பாடுபவர்களுக்காக தனிப்பக்கங்கள் ஒதுக்கியிருக்க வேண்டாமோ? ஒரு பிரபல பத்திரிகையில் வந்த இசை விமர்சனம், பாடகர் ஒரு தமிழ்ப் பாடலைத் தவறாகப் பாடியதாகச் சாடியது. அப்பாடகர் புத்தகத்திலிருந்து நகல் எடுத்து அனுப்பி, தான் பாடியது சரி என்று நிலைநாட்டிய பின்னும், "பாடகர் நகல் அனுப்பியிருந்தார். இருப்பினும் அந்தக் காலத்தில் நான் கேட்டது வேறு மாதிரி இருந்தது.", என்ற விமர்சகரின் சப்பைக்கட்டே பத்திரிகையில் வெளியாகியிருந்தது. இதே பாடகர் புரியாத பாஷையில் பாடியிருந்தால் இந்தப் பிரச்னை எழுந்திருக்காது என்ற நிலையில், பாடகர் அடுத்த கச்சேரியில் தமிழில் பாட யோசிப்பார்தானே?
கர்நாடக இசைத்துறையும் ஒரு தொழிலே! அங்கு பாடுபவர்களும், பொருள் ஈட்டி, நல்ல முறையில் வாழ்க்கை நடத்த வேண்டியே பாடுகிறார்கள். மென்பொருள் விற்பன்னரைப் போல, பங்குச் சந்தை நிபுணரைப் போல, கர்நாடக இசைப் பாடகரும் ஒரு professional-தான். அப்படிப்பட்ட நிலையில், எவையெல்லாம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறதோ, எவையெல்லாம் கிடைப்பதற்குச் சுலபமாக உள்ளதோ, அவற்றை வைத்துத் தனது கச்சேரியை அமைத்துக் கொள்ளும் பாடகரை நாம் எப்படித் தவறு சொல்ல முடியும்? எந்த மொழிப் பாடல்கள் வேண்டுமானாலும் விற்கும் என்றால், சுலபமாகப் பாடம் செய்யக்கூடிய தெலுங்கு கீர்த்தனைகளையே பாடகர்கள் நாடுவதில் வியப்பொன்றுமில்லை. தமிழ்ப் பாடல்களுக்குத் தனிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டால், தமிழிசை பரவுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த மார்கழியில், மூன்று கச்சேரிகளில், கச்சேரிக்கு முன் பாடகர்களைச் சந்தித்து எங்களுக்குப் பிடித்தமான தமிழ்ப் பாடல்களைப் பாடுமாறு வேண்டினோம். அம்மூன்று பாடகர்களுமே எங்கள் கோரிக்கைக்கு இணங்கினர்.
தமிழிசையில் உண்மை நாட்டம் உள்ளவர்கள் கச்சேரிகளுக்கு வர வேண்டும். தயங்காமல் தங்கள் விருப்பத்தைப் பாடகருக்குத் தெரியப்படுத்த வேண்டும். தமிழிசைக் கச்சேரிகள் நிகழும் இடங்களில் கூட்டம் குவிய வேண்டும். கச்சேரி நிகழ்த்தும் சங்கங்களுக்கு லாபம் பெருக வேண்டும். அச்சபைகளின் வளர்ச்சி, மற்ற சபைகளை அவ்வழிக்கு இட்டுச் செல்ல வேண்டும். பத்திரிக்கைகள், வருடம் ஒரு முறை நிகழ்த்தும் திவசம் போல, 'ஒரு தலையங்கம் எழுதினால் எங்கள் கடன் தீர்ந்தது', என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்ப் பாடல்கள் பாடுபவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அந்த உற்சாகம் பாடகர்களைப் பல புதிய பாடல்களைத் தேட நிச்சயம் செலுத்தும். அப்போது, புதைந்து கிடக்கும் பல மாணிக்கங்கள் வெளிக்கொணரப்படும்.
வரலாறு.காம் வாசகர்களுக்குத் தமிழிசை பொங்கும் இனிய புத்தாண்டாக இவ்வாண்டு மலர இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
அன்புடன்,
ஆசிரியர் குழு.