ஹாய் மதனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
அன்பார்ந்த நேயர்களே!
தமிழனின் வரலாற்றை எழுத நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதுமில்லை என்று திரு.வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் கேள்விக்குப் பதிலளித்த திரு.மதன் அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம் இது. இதுபோல் எண்ணிக் கொண்டிருக்கும் மற்ற பல தமிழர்களும் உண்மையை உணர்ந்து கொள்ளும் விதமாக இங்கே வெளியிடுகிறோம்.
கேள்வி
வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ்.
'வந்தார்கள்... வென்றார்கள்' என்ற தலைப்பில், மயிலாசனப் பேரரசர்கள் பற்றிச் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் எழுதிய தாங்கள், சோழப் பேரரசு பற்றியும் அதுபோன்ற ஆதாரபூர்வ நூல் ஒன்றை எழுதினால், பெரும் பங்களிப்பாக இருக்குமே?!
பதில்
கி.மு.44ல் கொல்லப்பட்ட ஜூலியஸ் சீசர், தன் படையெடுப்புகளை நுணுக்கமாக விவரித்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் (ஏழு வால்யூம்கள்). ரோம், கிரேக்க வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அற்புதமான புத்தகம் (3 வால்யூம்கள்) எழுதியிருக்கிறார் ப்ளூடார்க். பாபர், 'பாபர்நாமா' என்னும் தன் வாழ்க்கை வரலாற்றில், இந்திய வெயில், மாம்பழங்கள் பற்றி யெல்லாம்கூட விவரித்திருக்கிறார். ஜஹாங்கீர் தினமும் என்னென்ன டிபன் சாப்பிட்டார் என்பது பற்றிய குறிப்புகள்கூட உண்டு! ஆனால்...
தமிழ் மன்னர்களைப் பற்றிப் பாடல்களும், கல்வெட்டுகளும்தான் மிஞ்சியிருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய பாடல்கள் அநேகமாக எதுவும் தற்போது இல்லை. புலவர்களுக்குத் தமிழ் மன்னர்கள் நிறைய மதுவும், பொற்காசுகளும் தந்தது உண்மை. விளைவு... உணர்ச்சிவசப்பட்ட புலவர்கள் அதீதமான கற்பனை செய்து மன்னர்களைப் பாராட்டிப் பாடல்களை எழுதிக் குவித்தார்கள். 'வெற்றி பெற நாடுகள் இல்லாமல், தோள்கள் தினவெடுக்க, வாளை உருவியவாறு கரிகாலன் இமயமலை வரை ஆட்கொள்ளக் கிளம்ப... இமயம், கடவுள்கள் வசிக்கும் மலை என்பதால், அதைக் கரிகாலனால் தாண்ட முடியவில்லை. எனவே, இமயமலை மீது மிகப் பெரிய புலிச் சின்னத்தைச் செதுக்கிவிட்டுத் திரும்பினார் அந்த மாவீரன்!' என்று சிலப்பதிகாரத்தில் ஒரு பாடல் மிகையாகப் புகழ்கிறது! உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை! தெருவில் நின்ற கரிகாலனுக்குப் பட்டத்து யானை மாலை அணிவித்து முடி சூட்டியதும், சிறையிலிருந்து தப்பித்தபோது கரிகாலனின் கால்கள் தீயால் பொசுங்கிக் 'கரிகாலன்' என்று பெயர் வந்ததும் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லாத வெறும் கற்பனையே! இதற்கெல்லாம் காரணம்... தமிழ்நாட்டில் முதலில் கவிதைகள்தான் தோன்றின! உரைநடை (Prose) எழுதப்பட்டது பிற்பாடுதான்!
நிலைமை இப்படியிருக்க, எந்த ஆதாரங்களை வைத்துக் கொண்டு நாம் நம் வரலாற்றை எழுத முடியும்? கற்பனை கலந்த நாவல் (பொன்னியின் செல்வன் மாதிரி) வேண்டுமானால் எழுதலாம்!
கடிதம்
திரு. 'ஹாய்' மதன் அவர்களுக்கு,
வணக்கம்.
7-3-07 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் 'ஹாய் மதன்' பகுதியில் திரு. வெ.இறையன்பு அவர்கள் கேட்டிருந்த கேள்விக்குத் தாங்கள் பதிலளித்திருந்த விதம் எங்களை மிகவும் வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. 'வந்தார்கள் வென்றார்கள்' நூலைப் படித்துவிட்டுச் சரித்திரத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களை நாங்கள் அறிவோம். அதைப் படித்த ஒவ்வொரு தமிழனுடைய உள்ளத்திலும் தோன்றிய கேள்விதான் திரு. இறையன்பு அவர்களின் வாயிலாக வெளிப்பட்டுள்ளது. அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக வரலாற்றின்மீது ஈடுபாடு கொண்டிருக்கும் அவருக்கும் இதே அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறோம். அப்புத்தகத்தின் இறுதியில் தாங்கள் கொடுத்திருந்த துணைநூல் பட்டியல் தங்களின் உழைப்பைப் பறைசாற்றியது. அதைப் பார்த்துப் பிரமித்துப்போன ஒவ்வொரு வாசகனும் தங்களை ஓர் உயர்ந்த அறிஞரின் நிலையில் வைத்துத் தத்தம் ஐயங்களைப் போக்கிக் கொள்ளத் தங்களை நாடுகிறான். அப்படிப்பட்ட தங்களின் தமிழக வரலாறு பற்றிய சிந்தனை இப்படிப்பட்டதாக இருக்குமென்று சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. சங்க இலக்கியங்கள் வெறும் பாராட்டுப் பத்திரங்கள் என்ற தவறான கருத்து பல தமிழர்களின் உள்ளங்களில் பதிந்து கிடக்கிறது. தமிழக வரலாற்றைப் பற்றித் தமிழர்களே இத்தகைய மதிப்பீடுகள் கொண்டிருந்தால், புரிந்து கொள்ளவே மறுக்கும் வட இந்திய மற்றும் அண்டை மாநில ஆய்வாளர்களை என்ன சொல்வது? தாங்கள் கூறிய பதிலை வேறொரு சாதாரண மனிதன் கூறியிருந்தால், அதைப்பற்றி அவ்வளவாகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், தாங்கள் கூறுபவை அனைத்தும் உண்மையென்றும், முறையாக ஆராய்ந்த பிறகே கூறுகிறீர்கள் என்றும் நம்பும் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்குத் தவறான தகவல் சென்று சேரக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் விளைந்ததுதான் இக்கடிதம். இதை எந்த வகையில் புரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பது தங்களைப் பொறுத்தது. சுட்டிக்காட்ட வேண்டியது எங்கள் கடமை.
தமிழ் இலக்கியங்களில் கற்பனையோ மிகைப்படுத்தப்பட்ட செய்திகளோ இல்லவே இல்லை என்பதல்ல எங்கள் வாதம். சற்று ஆழ்ந்து வாசித்தால் கற்பனைகளை எளிதாக இனங்கண்டு விடலாமே என்பதுதான் எங்கள் ஆதங்கம். மன்னர்கள் புலவர்களுக்குப் பொற்காசுகள் தந்ததென்னவோ உண்மைதான். ஆனால் நிறைய மது கொடுத்திருக்கிறார்கள் என்கிறீர்களே, அதற்கு என்ன ஆதாரம் என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? பொருள் தரும் மன்னர்களைப் பாராட்டிப் பாட்டெழுதியதால் கற்பனை மிகுந்தது என்கிறீர்கள். அடையாளம் தெரியாத தலைவனையும் தலைவியையும் தோழியையும் வைத்து அகத்திணைப் பாடல்களைப் புனைந்த புலவர்களைப் புரந்தவர்கள் யார்? அவர்கள் அத்தகைய பாடல்களை இயற்ற வேண்டிய அவசியம் என்ன? தொல்காப்பியமும் திருக்குறளும், மதுவுக்கும் பொன்னுக்கும் மயங்குபவர்களால் எழுதிவிடக் கூடியவையா? சிலப்பதிகாரம் ஒரு குடிமக்கள் காப்பியம். மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் கூறுவதுடன் சுவைக்காக வேண்டிச் சில வர்ணனைகளும் கலந்தே இருக்கும். ஏதோ ஒன்றிரண்டு கற்பனைகளைக் காரணம் காட்டி அதைப் புறந்தள்ளிவிட்டால், அதுகூறும் ஆடற்கலை மற்றும் இசைக்கலை நுணுக்கங்களை ஆழ்ந்து அனுபவித்து மகிழ்வது எங்ஙனம்? அது வலியுறுத்தும் நீதிகளை மனதிற்கொண்டு வாழ்வைச் செம்மையுறச் செய்வது எவ்விதம்?
அந்தந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் எழுதி வைத்த நூல்களையும் குறிப்புகளையும் கொண்டுதான் வரலாற்றை அப்படியே எழுதவேண்டும் என்றால், ஆராய்ச்சி என்ற ஒரு துறை எதற்காக? பழைய கள்ளைப் புதிய மொந்தையில் தருபவருக்குப் பெயர்தான் வரலாற்றறிஞரா? ஜூலியஸ் சீசரும் ப்ளூடார்க்கும் பாபரும் ஜஹாங்கீரும் விட்டுச் சென்ற செய்திகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் நீலகண்ட சாஸ்திரியாரும் சதாசிவ பண்டாரத்தாரும் இன்னும் பிற அறிஞர்களும் தொகுத்து வைத்திருக்கும் சோழர் வரலாறு தாங்கள் அறியாததா? அவர்களையெல்லாம் அவமானப் படுத்துவது போலல்லவா அமைந்திருக்கிறது தங்கள் பதில்!! ஒரே இடத்தில் குவித்து வைக்கப்படாமல், பல்வேறு கோயில்களில் பரவலாகக் கல்வெட்டுகளாக வெட்டி வைத்திருப்பதாலும் அந்நியப் படையெடுப்பு மற்றும் திருப்பணிகளின்போது ஏற்பட்ட பாதிப்புகளாலும் சரித்திரச் சங்கிலியின் ஓரிரு கண்ணிகள் இன்னும் அகப்படாமல் போயிருக்கலாம். அதற்காகத் தமிழனுக்கு வரலாறே இல்லையென்ற முடிவுக்கு வருவது முறைதானா? வரலாறு இல்லாமல் வரலாற்றுக் கற்பனை நாவல் ஏது? கற்பனை செய்வதற்கும் ஏதாவது ஒரு Reference வேண்டுமே! கற்பனையில் உதித்த வேற்று கிரகவாசி என்றாலும், இரண்டு கை, இரண்டு கால்களுடனும்தானே கற்பனை செய்ய முடிகிறது?
தமிழக வரலாற்றைப் பற்றிப் பாடல்களும் கல்வெட்டுகளும் மட்டுமே மிஞ்சியிருப்பதாக குறைப்பட்டிருக்கிறீர்கள். ஏன்? இந்த இரண்டும் போதாதா? இவற்றில் விடுபட்டவற்றை நிரப்பத்தான் செப்பேடுகளும் சாசனங்களும் இருக்கின்றனவே! அதற்கும் மேலாக, கட்டடக்கலையும் சிற்பக்கலையும் பழங்கால ஓவியங்களும் கண்ணிருப்பவர்களுக்குத் தருமே ஆயிரம் செய்திகளை! பெரும்பாலான கல்வெட்டுகள் நிவந்தங்களைப் பற்றியதாகவே இருந்தாலும், மண்ணிலிருந்து தங்கத்தையும் நிலக்கரியையும் பிரித்தெடுப்பது போல் தமிழக வரலாற்றைக் கவனமுடன் வடித்தெடுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுடன் தங்களுக்கு நிச்சயம் தொடர்பிருக்கும். அவர்களெல்லாம் இல்லாத ஒன்றைத் தேடி வெட்டி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறீர்களா? சங்கப்பாடல்களும் கல்வெட்டுகளும் பொய்யுரைப்பவையெனில், 'உண்மையில் கரிகாலன், தெலுங்குப் பகுதிகளை (ஆந்திரம்) தாண்டிப் போனதில்லை!' என்ற தங்களின் கூற்று எந்த விதத்தில் மெய்? எந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு இதை எழுதினீர்கள்? இமயத்திலிருக்கும் Chola pass என்ற இடத்திற்குத் தாங்கள் தரும் விளக்கம் என்ன?
சங்க இலக்கியங்களில் வரலாறு இல்லை என்கிறீர்களே! இதோ எடுத்துக்காட்டுகிறோம் இரண்டு அகநானூற்றுப் பாடல்களை!
அகநானூறு - 126ம் பாடல் - தலைமகன் கூற்று - நக்கீரர் இயற்றியது - மருதத்திணை
நினவாய் செத்து நீ பல உள்ளிப்,
பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும்,
மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்
தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
அறல் வார் நெடுங் கயத்து அரு நிலை கலங்க,
மால் இருள் நடுநாள் போகி, தன் ஐயர்
காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு,
அவ் வாங்கு உந்தி, அம் சொல், பாண்மகள்,
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில்
பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள்,
கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி
நயம் புரி நன் மொழி அடக்கவும் அடங்கான்,
பொன் இணர் நறு மலர்ப் புன்னை வெஃகித்,
திதியனொடு பொருத அன்னி போல
விளிகுவை கொல்லோ, நீயே கிளி எனச்
சிறிய மிழற்றும் செவ்வாய், பெரிய
கயல் என அமர்த்த உண்கண், புயல் எனப்
புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால்,
மின் நேர் மருங்குல், குறுமகள்
பின்னிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே?
அகநானூறு - 145ம் பாடல் - செவிலித்தாய் கூற்று - கயமனார் இயற்றியது - பாலைத்திணை
வேர் முழுது உலறி நின்ற புழல்கால்,
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
வற்றல் மரத்த பொன் தலை ஓதி
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு
வாள்வரி பொருத புண் கூர் யானை
புகர் சிதை முகத்த குருதி வார,
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும்
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர்
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,
கடு நவைப் படீஇயர் மாதோ - களி மயில்
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை,
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பால்
சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது,
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்,
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என்
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!
'கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று' (பொருள் : கடலைவிடப் பெரிதாகத் தோற்றமளிக்கும் காவிரி) , 'பழஞ் செந் நெல்லின் முகவை கொள்ளாள், கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்' (பொருள் : ஊர்மக்கள் விலையாகத்தர முன்வந்த நெல்லைவிட அவர்கள் அணிந்திருக்கும் முத்துக்களின் அளவு விலை பெறும் அவள் வைத்துள்ள கோடுகளையுடைய வாளை மீன்) போன்ற வரிகள் பாரதத்தின் இன்றைய புவியியல் மற்றும் பொருளாதார நிலையை மனதில் கொண்டு விளங்கிக் கொள்ள முயன்றால், உயர்வு நவிற்சி அணியாகத் தோன்றலாம். ஆனால், 'அப்போவெல்லாம் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடும்' என்ற நம் தாத்தா பாட்டிகளின் மொழியைக் கேட்கும் வாய்ப்பமைந்திருந்தால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காவிரியின் தீரம் என்னவென்று எளிதாகப் புலப்படுமே! அதற்குப் பின்னும் இதைக் கற்பனையென்று புறந்தள்ள மனம் வருமா? காவிரியின் பிரவாகத்தை வர்ணிக்கும் சங்கப்பாடல்கள் ஒன்றா, இரண்டா? அவையனைத்துமே கற்பனையில் உதித்தவையா?
முறத்தால் புலியை விரட்டியதையும், கால் பொசுங்கிக் 'கரிகாலன்' ஆனதையும் வேண்டுமானால் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பாடல் வரிகளுக்குள் இலைமறை காயாகப் புதைந்து கிடக்கும் பொக்கிஷங்களையும் நோக்க மறுத்தால், இழப்பு நமக்குத்தான். இரண்டு பாடல்களுக்கும் பொதுவாக இருக்கும் வரிகளை ஆராய்வோமா? 'அன்னிக்கும் திதியனுக்கும் போர் நடந்தது. நடந்த இடம் குறுக்கைப் பறந்தலை. திதியனின் காவல் மரமான புன்னையை வெட்டித் திதியனை அவமானப்படுத்த முயன்றார் அன்னி. வேண்டாம் எனத் தடுத்தார் எவ்வி. கேட்காமல் வெட்டி வீழ்த்தினார் அன்னி. அடுத்து நடந்த போரில் அன்னி கொல்லப்பட்டார்'. இரண்டு வெவ்வேறு புலவர்களால் வெவ்வேறு சூழ்நிலைகளில் பாடப்பட்ட இரு பாடல்களில் ஒரே செய்தி நினைவு கூரப்படுகிறது. இது பரிசிலுக்காக மன்னரை வாழ்த்திப் பாடியதும் அன்று. அப்படியே பாடியிருந்தாலும் யார்தான் இதற்குப் பரிசளித்திருப்பார்கள்? அன்னியா? திதியனா? எவ்வியா? பரிசளிக்கும் அளவிற்கு இதில் என்ன புகழ்ச்சி இருக்கிறது? இவையெதுவும் இல்லாத நிலையில், உண்மையாகவே அன்னிக்கும் திதியனுக்கும் போர் நடந்ததால்தானே இரண்டு புலவர்களும் ஒரே நிகழ்ச்சியைப் பாடியுள்ளனர்? அல்லது இருவருமே ESPயை வைத்துக் கனவு கண்டு பாடல்கள் புனைந்தனரா?
எங்கள் வரலாறு.காம் மின்னிதழ் 30 ஆம் இதழில் சங்கச்சாரல்-13 என்ற கட்டுரையில் இவ்விரண்டு பாடல்களும் கூறும் மற்ற கருத்துக்களையும் விரிவாக அலசியுள்ளோம். இது மட்டுமல்ல. சமீபத்தில் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத்துறைத் தலைவர் பேராசிரியர் திரு.கா.இராஜன் அவர்கள் தலைமையில் அகழ்வாய்வு செய்யப்பட்ட சங்ககால நடுகல் ஒன்றின் செய்தி சங்க இலக்கியங்களில் இருக்கும் குறிப்புகளுடன் பொருந்தி வந்ததும், அதன்பின் இலக்கியங்கள் குறிப்பிடும் 'எழுத்து' என்பது 'படங்கள்' அல்ல, தமிழ் அரிச்சுவடி எழுத்துக்களே என்று தங்களைப்போல் சங்க இலக்கியங்களைக் குறைத்து மதிப்பிட்ட பிற பேராசிரியர்கள் ஒப்புக்கொண்டதும் இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட உண்மைகள்.
கல்வெட்டுகள் மட்டும் என்ன? அவையும் தகவல் சுரங்கங்களே என்று நிரூபிக்கக் கடலளவு ஆதாரங்கள் உள்ளன. இக்காலக் கோயில்களில் ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதன் ஒளியையே மறைக்கும் அளவுக்குத் தங்கள் பெயரை எழுதி வைத்துவிடும் மாக்களின் செயலுடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுக் கண்ணிருந்தும் குருடர்களாகின்றனர் சிலர். ஆனால், உண்மை அவ்வாறில்லை என்று மீண்டும் ஒருமுறை எங்கள் மின்னிதழின் 31 ஆம் இதழின் சோழதேசத்தில் ஒரு சேரர் கோயில் - 2 என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளோம். பழுவூரை ஆண்ட பழுவேட்டரையர்களின் வரலாற்றை எப்படிக் கல்வெட்டுகள் நமக்குத் தருகின்றன என்று விளக்கும் அந்தக் கட்டுரையின் சுருக்கத்தை மீண்டும் இங்கே தங்களின் பார்வைக்கு வைக்கிறோம்.
பழுவேட்டரையர்களுடன் தொடர்புடைய சோழர் கல்வெட்டுகளின் அட்டவணை :-
எண் | கல்வெட்டு இருக்குமிடம் | கோயில் பெயர் | சோழமன்னர் | ஆட்சியாண்டு | பழுவேட்டரையர் | செய்தி | ஆண்டறிக்கை எண் |
1 | திருவையாறு | பஞ்சநதீசுவரர் கோயில் | முதலாம் ஆதித்தர் | 10 | குமரன் கண்டன் | நிவந்தமாக அளிக்கப்பட்ட நிலத்தின் கிழக்கு மற்றும் வடக்கெல்லைகளில் இருந்த நிலம் குமரன் கண்டனுடையது | SII Volume 5, No. 523 |
2 | மேலப்பழுவூர் | அவனிகந்தர்ப்ப ஈசுவரம் | முதலாம் ஆதித்தர் | 12 | குமரன் கண்டன் | 'குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்ற சிறப்புடன் குறிப்பிடப்படுகிறார் | SII Volume 3, No. 235 |
3 | திருவையாறு | பஞ்சநதீசுவரர் கோயில் | முதலாம் ஆதித்தர் | 19 | குமரன் மறவன் | இவர் நம்பி மறவனார் என்று குறிப்பிடப்படுவதால், இளவரசராக இருந்தார் என்று கொள்ளலாம் | SII Volume 5, No. 537 |
4 | மேலப்பழுவூர் | அவனிகந்தர்ப்ப ஈசுவரம் | முதலாம் ஆதித்தர் | 22 | குமரன் மறவன் | இதிலும் 'குமரன் மறவன் பிரசாதத்தினால்' என்று குறிப்பிடப்படுகிறார் | SII Volume 8, No. 298, ARE 355 of 1924 |
5 | லால்குடி | சப்தரிஷீசுவரர் கோயில் | முதலாம் பராந்தகர் | 5 | குமரன் மறவன் | 'அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன்' என்று பெருமைப்படுத்துகிறது | SII Volume 19, No. 146 |
6 | திருப்பழனம் | மகாதேவர் கோயில் | முதலாம் பராந்தகர் | 6 | குமரன் மறவன் | குமரன் மறவனோடு தீப்பாஞ்ச அழகியான் பற்றிய தகவலைத் தருவதன் மூலம் குமரன் மறவனின் காலம் முடிந்துவிட்டதைக் குறிப்பிடுகிறது | SII Volume 19, No. 172 |
7 | கீழப்பழுவூர் | திருவாலந்துறையார் கோயில் | முதலாம் பராந்தகர் | 12 | கண்டன் அமுதன் | வெள்ளூர்ப் போரில் பராந்தகருக்காகப் போரிட்டு வெற்றி பெற்ற செய்தி | ARE 231 of 1ட்926 |
8 | திருவையாறு | பஞ்சநதீசுவரர் கோயில் | முதலாம் பராந்தகர் | 14 | கண்டன் அமுதன் | இது 'வெள்ளூர்ப் போரில் கண்டன் அமுதன் இறந்தார்' என்ற அறிஞர்களின் கருத்தை மறுக்கிறது | SII Volume 5, No. 551 |
9 | மேலப்பழுவூர் | அவனிகந்தர்ப்ப ஈசுவரம் | சுந்தரசோழர் | 5 | மறவன் கண்டன் | இவரது கொடை, ஆட்சிமுறை, வரியமைப்பு பற்றிப் பேசுகிறது | SII volume 5, No. 679 |
10 | கீழப்பழுவூர் | திருவாலந்துறையார் கோயில் | உத்தமச்சோழர் | 9 | மறவன் கண்டன் | இவரது மறைவைத் தெரிவிக்கிறது | SII Volume 19, No. 237, 238 |
11 | உடையார்குடி | அனந்தீசுவரர் கோயில் | உத்தமச்சோழர் | 12 | கண்டன் சத்ருபயங்கரன் | இவர் மறைவுக்காக இவர் தமையன் கண்டன் சுந்தரசோழன் இக்கோயிலில் ஐந்து அந்தணர்களை உண்பிக்கவும் நந்தா விளக்கெரிக்கவும் கொடையளித்தான் | SII Volume 19, No. 305 |
12 | கீழப்பழுவூர் | திருவாலந்துறையார் கோயில் | உத்தமச்சோழர் | 13 | கண்டன் சுந்தரசோழன் | இக்கோயிலில் ஆடவல்லான் திருமேனியை ஊசலாட்ட வாய்ப்பாக ஒரு மண்டபம் அமைத்துக் கொடுத்தார். கல்வெட்டுகளின்வழி 'ஆடல்வல்லான்' என்ற பெயரை முதன்முதலாக வரலாற்றுக்கு அறிமுகப்படுத்தியவர் | SII Volume 5, No. 681 |
13 | மேலப்பழுவூர் | அவனிகந்தர்ப்ப ஈசுவரம் | உத்தமச்சோழர் | 15 | கண்டன் மறவன் | நிவந்தம் அளித்தது | SII Volume 8, No. 201 |
14 | மேலப்பழுவூர் | அவனிகந்தர்ப்ப ஈசுவரம் | முதலாம் இராஜராஜர் | 3 | கண்டன் மறவன் | கொடும்பாளூரையாண்ட இருக்குவேளிர் குலத்திற்கும் பழுவேட்டரையர் குலத்திற்கும் ஏற்பட்ட மண உறவைத் தெரிவிக்கிறது | SII Volume 5, No. 671 |
15 | மேலப்பழுவூர் | அவனிகந்தர்ப்ப ஈசுவரம் | முதலாம் இராஜராஜர் | 15 | கண்டன் மறவன் | இவரைப்பற்றிக் குறிப்பிடும் கடைசிக் கல்வெட்டு இதுவே | ARE 363 of 1924 |
16 | கீழப்பழுவூர் | திருவாலந்துறையார் கோயில் | முதலாம் இராஜேந்திரர் | 8 | யாருமில்லை | பழுவேட்டரையரின் பணிப்பெண் வீராணன் ஒற்றியூர் இக்கோயிலுக்களித்த கொடையைக் கூறுகிறது | SII Volume 5, No. 665 |
மேற்கண்ட 16 கல்வெட்டுகளும் நிவந்தங்கள் கொடையளிக்கப்பட்ட செய்தியையே தெரிவித்தாலும், 'இவ்வளவு பொன்னும் பொருளும் கொடுத்திருக்க வாய்ப்பே இல்லை. ஒவ்வொரு கல்வெட்டையும் அந்தந்த மன்னர் உடனிருந்து சரிபார்த்திருக்கவா போகிறார்?' என்று 23ம் புலிகேசியைப் போல் எல்லா மன்னர்களையும் எண்ணிக்கொள்ளும் சில அறியாப்பிள்ளைகளின் வாதத்திற்காகப் பொன்னையும் பொருளையும் விட்டு விட்டு, பழுவூரை ஆண்ட அரசர்களின் பெயர்களை மட்டும் சோழ மன்னர்களின் ஆட்சியாண்டுடன் ஒப்பிட்டுக் கீழ்க்கண்ட முடிவிற்கு வரலாம்.
1. கல்வெட்டுகளின் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்ட பழுவேட்டரையர்களின் காலம் கி.பி 881 இல் இருந்து கி.பி 1020 வரை.
2. பழுவூரை ஆண்ட மன்னர்களின் வரிசைக்கிரமம் குமரன் கண்டன், குமரன் மறவன், கண்டன் அமுதன், மறவன் கண்டன், கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் என்பதாகும்.
3. இந்த வரிசையில் First name, Last name logic-ஐ வைத்துப் பார்த்தால், பழுவேட்டரையர்களின் தலைமுறையைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தலாமே!
வம்சாவளி மட்டுமா? பழுவூரின் அன்றைய பொருளாதாரநிலை, சமூக அமைப்பு, கோயில்களின் நிலை, விவசாயம் மற்றும் பாசனம் பற்றிய குறிப்புகள், கலை வளர்ந்த விதம், விளையாட்டுக்களிலும் வீரத்தைப் போற்றிய சூழல், அண்டை நாடுகளுடன் இருந்த தொடர்புகள், மற்ற அரசர்களுடனான திருமணத் தொடர்புகள், பங்கேற்ற போர்கள் போன்ற எண்ணற்ற விவரங்களை, திருச்சிராப்பள்ளி டாக்டர்.மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் இயக்குனர் முனைவர்.இரா.கலைக்கோவன் அவர்களால் எழுதப்பட்ட 'பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம்' என்ற நூலில் பெறலாம்.
கல்வெட்டுகளைப் படிப்பது என்பது எளிதான வேலை. கண்பார்வை நன்றாக இருக்கும் எவராலும் முடியக்கூடிய ஒன்று. ஆனால் அக்கல்வெட்டுகள் தரும் செய்திகளைத் தொகுத்து வகுத்து வரலாற்றை வடிப்பதென்பது, முன்முடிவுகள் ஏதுமின்றி, வரலாற்றைத் தத்தம் கொள்கைக்கேற்ப வளைக்க வேண்டும் என்ற கபடமின்றி அணுகும் ஆய்வாளர்களால் மட்டுமே முடியும். அதனால்தான் புகழ்விரும்பி ஆய்வாளர்களால் வெகுஜனப் பத்திரிகைகளில் தரப்படும் அரைகுறைச் செய்திகளைச் சாதாரண மக்களால் எளிதாகத் தவறென்று நிரூபித்து, 'வுடறார் பாரு கப்ஸா!' என்று எள்ளி நகையாட முடிகிறது. என்னதான் ஆய்வாளர்கள் பாடுபட்டு ஆராய்ந்து வரலாற்றுச் செய்திகளை வெளியிட்டாலும், அச்செய்திகள் மக்களைச் சென்றடைய வழிவகுப்பவை அச்செய்திகள் எழுதப்படும் எளிய, சுவையான நடையே. புளூடார்க்கும் பாபரும் விட்டுச்சென்ற குறிப்புகளை அப்படியே புத்தக வடிவில் தந்தால், எத்தனை இந்தியர்களால் அவற்றைப் புரிந்து, உணர்ந்து, அனுபவித்து, புளகாங்கிதமடைந்து மகிழ முடியும்? தங்களின் 'வந்தார்கள் வென்றார்கள்' மூலமாகவன்றோ அது சாத்தியமாயிற்று? முகலாயர்கள் வரலாறு தந்த அந்த இனிய அனுபவத்தை, அவர்களைவிடக் காலத்தால் மிகவும் முற்பட்ட, எதிரி நாடே ஆயினும் போர்களின் போது கலைச்செல்வங்களுக்குச் சிறிதும் சேதம் விளைவிக்காத, மிகச்சிறந்த கட்டடக்கலையையும் சிற்பக்கலையையும் நமக்குக் கொடையளித்துச் சென்ற சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களின் வரலாறும் தரவேண்டும் எனத் தமிழர்கள் எதிர்பார்ப்பது தவறா? எழுத்தாளர் சுஜாதா தங்கள் நூலின் முன்னுரையில் கூறியிருப்பதுபோல், கல்விநிலையங்களில் வரலாற்றுப்பாடம் தங்களின் நூல் அளவுக்குச் சுவையாகப் பயிற்றுவிக்கப் பட்டால், அனைத்து மாணாக்கர்களும் நூறு விழுக்காடு பெறுவார்களே! தொழிற்கல்வியில் இடங்கிடைக்க உதவாத பாடம் என்று புறக்கணிக்கப்படாமல், பெரும்பாலான மாணவர்களின் விருப்பப்பாடமாகத் தமிழக வரலாறு மாறுமே! செய்வீர்களா? எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறோம்.
நன்றி, வணக்கம்.